ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டி? அமேதி தொகுதிக்கு புதுமுகம் அறிமுகம்
- கடந்த சனிக்கிழமை ரேபரேலி, அமேதி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்ய காங்கிரஸ் தேர்தல் குழுவின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் மத்திய மந்திரி ஸ்மிருதிஇரானியை எதிர்த்து களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதி காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க கோட்டையாக திகழும் தொகுதி ஆகும்.
1951-ம் ஆண்டு தேர்தல் முதல் இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சி தனது வசம் வைத்திருக்கிறது. இந்திய அரசியலில் எத்தனையோ அரசியல் மாற்றங்களும், புயல்களும் வீசினாலும் இந்த தொகுதி காங்கிரசுக்கு விசுவாசமிக்க தொகுதியாக உள்ளது.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ரேபரேலி தொகுதியில் இருந்து 3 முறை பாராளுமன்றத்துக்கு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் பெரோஸ் 1952-ம் ஆண்டு முதல் 1957-ம் ஆண்டு வரை இந்த தொகுதியில் எம்.பி.யாக இருந்து உள்ளார்.
இவர்களை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் சோனியா அடுத்தடுத்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் அந்த தொகுதியில் 4 தடவை தொடர்ந்து எம்.பி.யாக இருந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சோனியா பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாக தேர்வாகி உள்ளார். ரேபரேலி தொகுதியில் போட்டியிடவில்லை என்பதை அவர் கடந்த ஆண்டே அறிவித்து விட்டார். இதனால் ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்பதில் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்திரா, சோனியாவை தொடர்ந்து பிரியங்காவை அந்த தொகுதியில் களம் இறக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும் விருப்பம் தெரிவித்தனர். ரேபரேலி தொகுதியில் இருந்தும் பிரியங்காவை வரவேற்று கடிதங்கள் அனுப்பப்பட்டன. எனவே பிரியங்கா ரேபரேலி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
கடந்த சனிக்கிழமை ரேபரேலி, அமேதி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்ய காங்கிரஸ் தேர்தல் குழுவின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் அந்த 2 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவிக்கும் அதிகாரம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த 2 தொகுதிகளிலும் மே 20-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வருகிற 3-ந்தேதி மனுதாக்கலுக்கு கடைசி நாளாகும்.
எனவே ஓரிரு நாளில் ரேபரேலி தொகுதி வேட்பாளராக பிரியங்கா அறிவிக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக பிரியங்கா பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று கூறி விட்டதாக தெரிய வந்துள்ளது. தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி இருந்து பிரசார பணிகளை மட்டும் மேற்கொள்ள அவர் முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற கேள்விக்குறி எழுந்தது. அதற்கு விடை அளிக்கும் வகையில் இன்று காலை காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து பரபரப்பு தகவல் வெளியானது. அதன்படி ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் களம் இறக்கப்படுவார் என்று தெரிகிறது.
இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று வெளியிட உள்ளார். இந்த திடீர் திருப்பத்தால் ரேபரேலி தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
அந்த தொகுதியில் ரோடு ஷோ நடத்தி ராகுல் வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.
வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் மத்திய மந்திரி ஸ்மிருதிஇரானியை எதிர்த்து களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே சமயத்தில் அமேதி தொகுதியில் ஸ்மிருதிஇரானியை எதிர்த்து வெற்றி பெற இயலுமா? என்பதிலும் ராகுலுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் அவர் அமேதியில் களம் இறங்க சற்று தயக்கத்துடன் இருந்து வந்தார். அதை உறுதிபடுத்தும் வகையில் அமேதியில் போட்டியிட தயாராக இருப்பதாக பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா அடிக்கடி சொல்லி வந்தார்.
ஆனால் ராபர்ட் வதேராவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட மாட்டாது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் அது மேலும் சர்ச்சையை உருவாக்கி விடும் என்று சோனியா குடும்பத்தினர் கருதுகிறார்கள்.
இந்த நிலையில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் புதுமுகம் களம் இறங்குவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷீலா கவுலின் பேரனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஷீலா கவுலும் சோனியா குடும்பத்து உறவினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.