ராகுலுக்கு பிரதமராகும் தகுதி - லாலு பிரசாத் கருத்து
- 2023ல் உருவான இந்தியா கூட்டணியில் ஆர்ஜேடி, ஜேடி(யூ) கட்சிகள் இணைந்திருந்தன
- நிதிஷ் குமாருக்காக கதவு திறந்தே உள்ளது என்றார் லாலு
வரும் ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவைக்கான 543 இடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
பா.ஜ.க.வை தலைமையாக கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கி இந்தியா கூட்டணியும், தேர்தலை எதிர்கொள்ள மும்முரமாக வியூகங்களை அமைத்து வருகின்றன.
கடந்த வருடம் உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியில் பீகார் மாநில ராஷ்டிரிய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் இணைந்திருந்தன.
பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தள ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தள தலைவர், நிதிஷ் குமார் முதல்வராக பதவி வகித்தார்.
ஆனால், 2024 ஜனவரி மாத இறுதியில், நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா கட்சியின் கூட்டணியிலிருந்து விலகி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, பா.ஜ.க.வை தலைமையாக கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து, மீண்டும் முதல்வராகி, அவர்கள் ஆதரவுடன் பீகார் சட்டமன்றத்தில் பெரும்பான்மையையும் நிருபித்தார்.
இந்நிலையில், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், முன்னாள் பீகார் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் பேட்டியளித்தார். அவரிடம் நிதிஷ் குமார், ராகுல் காந்தி உட்பட பலரை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.
அப்போது லாலு கூறியதாவது:
நிதிஷ் குமார் மீண்டும் எங்கள் கூட்டணியில் இணைய விரும்பினால் இணையலாம். அவருக்காக கதவு திறந்தே உள்ளது.
இந்திய பிரதமராவதற்கு ராகுலிடம் என்ன குறை உள்ளது? அவரிடம் எந்த குறையும் இல்லை.
இவ்வாறு லாலு தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத கட்சி தலைவர்கள் மற்றும் எதிர்பார்த்த எண்ணிக்கையில் இடங்கள் கிடைக்காத கட்சிகள், எதிரெதிர் கூட்டணிகளுக்கு மாறுவது தொடரலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.