சிறிய குற்றத்திற்காக ஏராளமானோர் கைது செய்யப்படும் போது அதானி ஏன் சிறையில் இல்லை?- ராகுல் காந்தி
- அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மீது குற்றச்சாட்டு.
- ஊழல் அல்லது லஞ்சம் வழக்கில் பெயர் சேர்க்கப்படவில்லை என அதானி குழுமம் விளக்கம்.
அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இன்று பாராளுமன்றத்திற்கு வெளியே நிருபர்களிடம் பேசிய ராகுல் காந்தி "நாட்டின் நூற்றுக்கணக்கான மக்கள் சிறிய குற்றத்திற்காக கைது செய்யப்படும்போது அதானி ஏன் சிறையில் இல்லை?. அவர் கைது செய்யப்பட வேண்டும். சிறையில் இருக்க வேண்டும். அரசு அவரை பாதுகாக்கிறது" என மத்திய அரசை குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையில் அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றச்சாட்டில் அதானி மற்றும் சாகர் அதானி பெயர்கள் லஞ்சம் குற்றச்சாட்டில் சேர்க்கப்படவில்லை என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
அதானி குழுமம் குற்றச்சாட்டை மறுப்பது தொடர்பாக கேட்ட கேள்விக்கு "அதானிகள் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் எந்த உலகில் வாழ்கிறீர்கள்? வெளிப்படையாக, அவர் குற்றச்சாட்டுகளை மறுக்கப் போகிறார்" என்றார்.