ராஜஸ்தான்: பாலியல் புகார் அளித்த பெண் மீது ஜாமினில் வந்த குற்றவாளி துப்பாக்கிசூடு
- பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளி பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் எனது இதயத்தை உலுக்கியது.
- ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்ணைச் சந்தித்து, இந்த சம்பவம் தொடர்பாக தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.
ராஜஸ்தான் மாநிலம், கோட்புல்லு என்ற நகரில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி ராஜேந்திர யாதவ் என்பவர் 25 வயது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதானார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஜாமீனில் வெளியே வந்த ராஜேந்திர யாதவ், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தன் மீதான வழக்கை திரும்ப பெற கோரி மிரட்டி உள்ளார். வழக்கை திரும்ப பெற முடியாது என்று அப்பெண் உறுதியாக இருந்திருக்கிறார்.
இதனால் கோபமடைந்த ராஜேந்திர யாதவ் தனது கூட்டாளிகளான மஹிபால் குர்ஜார், ராகுல் குர்ஜார் ஆகியோருடன் இணைந்து, தனது சகோதரருடன் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அப்பெண்ணை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மேலும் கூர்மையான ஆயுதங்களை கொண்டும் அவரையும், அவரது சகோதரரையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.
விவரம் அறிந்த காவல்துறையினர், ஹிபால் குர்ஜார், ராகுல் குர்ஜார் ஆகிய இருவரை கைது செய்யப்பட்டனர். ராஜேந்திர யாதவ் இன்னும் கிடைக்கவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் காயமடைந்த அப்பெண்ணுக்கு உள்ளூர் மருத்துவமனையில் தீவிர கிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அப்பெண்ணின் சகோதரருக்கும் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து முக்கிய குற்றவாளியான ராஜேந்திர யாதவை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்ணைச் சந்தித்து, இந்த சம்பவம் தொடர்பாக தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளி பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் எனது இதயத்தை உலுக்கியது. மருத்துவர்கள் தங்களால் இயன்றவரை அவரது உயிரை காப்பாற்றுங்கள் என கேட்டுக் கொள்கிறேன். ஏஎஸ்ஐயை சஸ்பெண்ட் செய்வது போதாது, இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.