ஏழை மாணவிகளுக்காக வாங்கிய 1,500 ஸ்கூட்டர்கள்: வெயிலில் நின்று வீணாகும் அவலம்
- ராஜஸ்தானில் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- இந்தத் திட்டத்துக்காக ஸ்கூட்டர்களை மாநில அரசு கொள்முதல் செய்து வருகிறது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் ஏழை மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்காக ஸ்கூட்டர்களை மாநில அரசு கொள்முதல் செய்து வருகிறது.
ராஜஸ்தான் அரசின் முதன்மைத் திட்டமாக இது கருதப்படுகிறது. சுமார் 80 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட இந்த ஸ்கூட்டர்கள் மூலம் 12 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டு வருமானம் இரண்டரை லட்சம் ரூபாய்க்கும் குறைவான குடும்பங்களில் இருந்து 11, 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரியில் மேற்படிப்பைத் தொடர ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது.
இந்தத் திட்டத்தில் தேர்வு பெற, மாணவிகள் மாநில வாரியத் தேர்வுகளில் 65 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாகவும், 10 அல்லது 12 ஆம் வகுப்புகளில் சிபிஎஸ்இ தேர்வுகளில் 75 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாகவும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இந்நிலையில், கடந்த ஆண்டு முதல் வாங்கப்பட்டு வந்த சுமார் 1,500க்கும் மேற்பட்ட ஸ்கூட்டர்கள் தெற்கு ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் உள்ள வித்யாமந்திர் கல்லூரி மற்றும் ஹர்தேவ் ஜோஷி அரசு பெண்கள் கல்லூரி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் அவை மாணவிகளுக்கு விநியோகம் செய்யப்படாமல், வெயிலில் காய்ந்தும், புற்கள் மண்டியும் உள்ளதால் வீணாகப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஸ்கூட்டர்களை விரைவில் தகுதியானவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு பிற்பகுதியில் ஏற்பட்ட அரசு மாற்றம் மற்றும் மக்களவைத் தேர்தலுக்கான மாதிரி நடத்தை விதிகள் ஆகியவற்றால் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.