தொடர் அமளியால் பாராளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
- அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளி.
- காங்கிரஸ் கட்சிதான் அம்பேத்கரை அவமதித்தது என பா.ஜ.க. பதிலுக்கு கடும் அமளியில் ஈடுபட்டதால் அவைகள் முடங்கின.
பாராளுமன்ற மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது "அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்" எனப் பேசினார்.
இதனால் அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கரை அவமதித்தாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பான நேற்று இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அம்பேத்கர் குறித்து பேசியது தொடர்பாக அமித் ஷா நேற்று விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு இரு அவைகள் கூடியதும் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோஷமிட்டனர். மேலும் அமித் ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கினார். அதேவேளையில் காங்கிரஸ் கட்சி அம்பேத்கரை அவமதித்ததாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. எதிர்க்கட்சிகளும், ஆளும் பா.ஜ.க-வும் பரஸ்பர குற்றம்சாட்டை முன்வைத்து இரு அவைகளிலும் அமளியில் ஈடுட்டன.
இதனால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு மக்களவை கூடியதும் மீண்டும் அதே பிரச்சனை இரு பக்கத்தில் இருந்தும் எழுப்பப்பட்டது. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் மக்களவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் ராகுல் காந்திக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வரப்போவதாக பா.ஜ.க. எம்.பி. ஜே.பி. நட்டா தெரிவித்தார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு பா.ஜ.க. எம்.பி.க்களும் பதிலுக்கு அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவையில் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாளை காலை 11 மணிக்கு இரு அவைகளும் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் தன்னை பா.ஜ.க. எம்.பி.க்கள் தடுத்து நிறுத்த முயன்றதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். அதேவேளையில் ராகுல் காந்தி தள்ளிவிட்டதால் இரண்டு பா.ஜ.க. எம்.பி.க்கள் காயம் அடைந்ததாக பா.ஜ.க.-வினர் குற்றம்சாட்டினர்.