இந்தியா

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: பிரதமருக்கு பாராட்டு தெரிவித்த காங்கிரஸ் தலைவர்

Published On 2024-01-13 09:55 GMT   |   Update On 2024-01-13 10:04 GMT
  • ஆர்எஸ்எஸ், பாஜக நடத்தும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில்லை என காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.
  • ராமர் கோவில் கட்டும் முயற்சியை மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு இமாச்சல பிரதேச காங்கிரஸ் தலைவர் பாராட்டு.

அயோத்தி ராமர் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்வதில்லை என காங்கிரஸ் மேலிடம் ஏற்கனவே முடிவு செய்துள்ள நிலையில், அக்கட்சியின் இமாச்சல பிரதேச தலைவர் பிரதீபா சிங், கோவில் கட்டும் முயற்சியை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, "அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சி உண்மையில் பாராட்டுக்குரியது. எனது கணவரும் முன்னாள் முதல்வருமான வீரபத்ர சிங், கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர். இமாச்சலப் பிரதேசத்தில் பல்வேறு ஆலயங்களை அவர் புதுப்பித்துள்ளார். ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழை நானும் எனது மகன் விக்ரமாதித்ய சிங்கும் இணைந்து பெற்றுள்ளோம். ஆனால், வரும் 22-ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்துக்கு செல்வது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என தெரிவித்தார். மேலும், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் ராமர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள் என்றும் எங்கள் மதம் முன்னேற வேண்டும் என நாங்கள் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக இமாச்சலப் பிரதேச பொதுப்பணித்துறை அமைச்சரும், முன்னாள் முதலமைச்சர் வீரபத்ர சிங்கின் மகனுமான விக்ரமாதித்ய சிங் கூறுகையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க போவதாக தெரிவித்தார். மேலும் "அயோத்தி ராமர் கோவில் இயக்கத்துக்கு எனது தந்தை ஆதரவாக இருந்துள்ளார். எங்களை பொறுத்தவரை இது அரசியல் விவகாரம் கிடையாது. இந்து மதத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் திசையில் நாங்கள் தொடர்ந்து பயணிப்போம் என கூறினார்.

தேர்தல் ஆதாயத்துக்காக முழுமையடையாத கோவிலை திறந்து வைக்க பாஜக முடிவு செய்துள்ளதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி நடத்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில்லை என மல்லிகார்ஜூன் கார்கே, சோனியா காந்தி, உள்ளிட்டோர் அழைப்பிதழை நிராகரித்தது குறிப்பிடதக்கது

Tags:    

Similar News