இந்தியா

சுப்பிரமணியசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் ரிசர்வ் வங்கி மனு

Published On 2023-01-05 01:59 GMT   |   Update On 2023-01-05 01:59 GMT
  • ஊழியர்களின் நடத்தையை விசாரிப்பதற்கான ஏற்பாட்டை ரிசர்வ் வங்கி கொண்டுள்ளது.
  • சுப்பிரமணியசாமி ஆதாரமின்றி கோருவது ஏற்புடையதல்ல.

புதுடெல்லி :

பல்வேறு வங்கி முறைகேடுகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி உயரதிகாரிகளிடம் சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியசாமி பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவை நீதிபதிகள் பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இதுதொடர்பாக பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு கடந்த விசாரணையின்போது உத்தரவிட்டது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் ரிசர்வ் வங்கி தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஊழியர்களின் நடத்தையை விசாரிப்பதற்கான ஏற்பாட்டை ரிசர்வ் வங்கி கொண்டுள்ளது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையமும் ஊழியர்களை கண்காணித்து வருகிறது.

பல்வேறு வங்கி முறைகேடுகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி உயரதிகாரிகளிடம் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று சுப்பிரமணியசாமி ஆதாரமின்றி கோருவது ஏற்புடையதல்ல. இதுபோன்ற மனுவை தாக்கல் செய்ய அவருக்கு உரிமையில்லை. எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற விசாரணையின்போது சி.பி.ஐ. சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, சி.பி.ஐ. பதில் மனு தாக்கல் செய்ய வேண்டிய தேவையில்லை என்றும், குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு எதிராக தனியொரு விசாரணை நடத்த முடியாது என்றும் வாதிட்டார்.

மனுதாரர் சுப்பிரமணியசாமி ஆஜராகி, ரிசர்வ் வங்கியின் பதில் மனு நேற்றுதான் கிடைத்தது. எனவே அதற்கு விளக்கம் அளிக்க அவகாசம் தேவை என வாதிட்டார்.

அதை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, விளக்கமனு தாக்கல் செய்ய 3 வாரம் அவகாசம் அளித்து, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தது.

Tags:    

Similar News