வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவி பலாத்காரம் செய்து கொலை: உறவினர் கைது
- ரத்தினகுமாரி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மவுலு அவரது வீட்டிற்குச் சென்றார்.
- சிறுமியின் பிணத்தை வீட்டின் பின்புறத்தில் உள்ள முட்புதரில் வீசினார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், பீமாவரத்தை சேர்ந்தவர் அஞ்சி. இவரது மனைவி துர்கா. தம்பதியின் ஒரே மகள் ரத்தினகுமாரி (வயது 14). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
மாணவிக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.
கடந்த 26-ந் தேதி சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றனர். சிறுமியின் உறவினரான பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மவுலு. காவலாளியாக வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி குவைத்தில் வேலை செய்து வருகிறார். இவரது இரண்டு மகள்களும் நரசாபுரத்தில் உள்ள விடுதியில் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இதனால் மவுலு மட்டும் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் ரத்தினகுமாரி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மவுலு அவரது வீட்டிற்குச் சென்றார். சிறுமியிடம் ஆசைவார்த்தைகளை கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
பின்னர் சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார். இந்த சம்பவத்தை சிறுமி வெளியில் சொல்லிவிட்டால் பிரச்சனை ஏற்படும் என்று எண்ணிய மவுலு சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
பின்னர் சிறுமியின் பிணத்தை வீட்டின் பின்புறத்தில் உள்ள முட்புதரில் வீசினார்.
மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமியின் பெற்றோர் மகள் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மகளை ஊர் முழுவதும் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அப்போது அவர்களுடன் மவுலு ஒன்றும் தெரியாதது போல் போலீஸ் நிலையம் சென்று இருந்தார். கடந்த 3 நாட்களாக தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை மவுலுவின் வீட்டின் பின்புறத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. அங்கு சென்று பார்த்தபோது சிறுமியின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ரவி பிரசாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மவுலுவின் வீட்டில் சோதனை நடத்தியபோது சிறுமியின் ஆடைகள் கண்டெடுக்கப்பட்டன.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மவுலுவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.