காணாமல் போன நாயை மீட்டு தந்தால் பரிசு என நோட்டீஸ்- ஆட்டோ டிரைவர் மூலம் மீட்பு
- வீட்டில் இருந்த அனைவரும் நகரம் முழுவதும் நாயை தேடி அலைந்தனர்.
- போலீசில் புகார் செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், பிராடி பேட்டை சேர்ந்தவர் வினோத். இவர் 2 வயதுடைய ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை வாங்கி வந்து அதற்கு மேக்ஸ் என பெயரிட்டனர். குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் குழந்தை போல நாய் செல்லமாக பழகியது.
இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி குண்டூரில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அப்போது வீட்டின் கதவு திறந்ததால் நாய் வீட்டில் இருந்து வெளியே சென்றது.
செல்லமாக வளர்த்து வந்த நாயை காணாததால் அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டில் இருந்த அனைவரும் நகரம் முழுவதும் நாயை தேடி அலைந்தனர். அண்டர் பேட்டை போலீசில் புகார் செய்தனர். மேலும் நகரம் முழுவதும் நாய் காணாமல் போனது குறித்து விவரங்களுடன் பேனர் வைத்தனர்.
நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என நாயின் விவரங்களுடன் துண்டு பிரசுரவும் அச்சடித்து பஸ் நிலையம், ரெயில் நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வீடு வீடாக வழங்கினா்.
இதற்கிடையே வீட்டிலிருந்து வெளியேறிய நாய் மழையில் நனைந்தபடி சாலை ஒரு ஓரத்தில் தவித்துக் கொண்டிருந்தது. இதனை பார்த்த ஆட்டோ டிரைவர் ஒருவர் அதன் அருகில் சென்று பிஸ்கட் கொடுத்தார்.
அவரை கண்டதும் நாய் ஆட்டோவில் ஏறி கொண்டது. இதனை அடுத்து நாயை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று பராமரித்து வந்தார்.
நாய் காணாமல் போனது குறித்து விளம்பரங்களை பார்த்து ஆட்டோ டிரைவர் உடனடியாக வினோத்தை தொடர்பு கொண்டு வரவழைத்து நாயை ஒப்படைத்தார். ஆட்டோ டிரைவருக்கு வினோத் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். ஆட்டோ டிரைவரை பிரிந்து சென்ற போது நாய் கால்களை தூக்கி அவருக்கு செய்கை காட்டியது. இந்த சம்பவம் அந்த பகுதியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.