இந்தியா

கிணற்று மண் சரிவில் சிக்கிய தமிழக தொழிலாளி பிணமாக மீட்பு- 50 மணி நேர போராட்டம் பலனளிக்கவில்லை

Published On 2023-07-10 05:52 GMT   |   Update On 2023-07-10 07:00 GMT
  • 90 அடி ஆழம் உள்ள கிணற்றில் பழைய கான்கிரீட்டை சீரமைக்கும் பணியை சக தொழிலாளர்களுடன் ஈடுபட்டிருந்தார்.
  • மண்ணுக்குள் மகாராஜன் சிக்கிக் கொண்டார். இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

திருவனந்தபுரம்:

குமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் மகா ராஜன்(வயது55). இவர் கடந்த 20 ஆண்டுகளாக கேரள மாநிலம் வெங்கானூர் நெல்லியறதலை பகுதியில் வசித்து கூலி வேலை பார்த்து வந்தார்.

கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சத்தில் முக்கோல பிச்சோட்டு கோணம் பகுதியை சேர்ந்த சுகுமாரன் என்பவர் வீட்டில் 90 அடி ஆழம் உள்ள கிணற்றில் பழைய கான்கிரீட்டை சீரமைக்கும் பணியை சக தொழிலாளர்களுடன் ஈடுபட்டிருந்தார்.

இடிவு மண்ணை அகற்றி விட்டு, பழைய குழாயை வெளியே எடுப்பதற்காக கிணற்றின் அடிப்பகுதியில் நேற்று முன்தினம் மகாராஜன் இறங்கினார். அவருக்கு சற்று மேலே இருந்த இடத்தில் மணிகண்டன் என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது கிணற்றின் இடைப்பகுதியில் மண் இளக்கமும், தண்ணீர் சலசலப்பும் இருந்ததை கிணற்றின் மேலே நின்றவர்கள் உணர்ந்தனர்.

இதனால் கிணற்றுக்குள் இருந்த இருவரையும் மேலே வரும்படி கூறினர். இதையடுத்து மகாராஜன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் கயிறை பிடித்து கிணற்றின் மேல் பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது கிணற்றுக்குள் மண்சரிவு ஏற்பட்டது.

மண்ணுக்குள் மகாராஜன் சிக்கிக் கொண்டார். இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விழிஞ்சம், சாக்கை தீயணைப்பு நிலைய வீரர்களும், போலீசாரும் விரைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மீண்டும் மண் சரிவு செய்யப்பட்டது.இதனால் மீட்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். மண் சரிவு ஏற்பட்ட கிணற்றில் கிணறு தரை மட்டத்தில் இருந்து 45 அடி ஆழம் வரை கிணற்றின் உள் விட்டம் 4 அடி ஆகும். அதற்கு கீழ் 45 அடி ஆழம் வரை உள் வட்டம் 3 அடியாகும். கிணற்றின் அடிப்பகுதியில் 20 அடி உயரத்தில் மண் சரிந்து விழுந்துள்ளது.

அதில் மகாராஜன் சிக்கி இருக்கலாம் என கருதப்பட்டு மீட்பு பணி துரிதப்பட்டுத்தப்பட்டது. நேற்று 2-வது நாளாக மீட்பு பணி தொடர்ந்தது. மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் ஈடுபட்டனர். கிணற்றுக்குள் உள்ள தண்ணீர் மற்றும் சகதியை அகற்றப்பட்டு தொழிலாளி மகாராஜனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அவரை மீட்கும் பணி இன்று 3-வது நாளாக நீடித்தது. அவர் மண்சரிவில் சிக்கி இன்று காலையுடன் 48 மணி நேரத்திற்கு மேல் ஆனதால் அவரது கதி என்ன ஆனது? என்று அனைவர் மத்தியிலும் கவலை ஏற்பட்டது. இருந்த போதிலும் மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மகாராஜன் கிணற்றுக்குள் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலை மீட்பு படையினர் கயிறு மூலம் கிணற்றுக்கு மேலே கொண்டு வந்தனர். 50 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மகாராஜன் பிணமாக மீட்கப்பட்டது அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமின்றி மீட்பு குழுவினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

Tags:    

Similar News