சட்டசபைக்கு செல்ல தைரியம் இல்லை- ஜெகன்மோகன் ரெட்டி மீது ஷர்மிளா பாய்ச்சல்
- நாட்டின் 70 கோடி மக்கள் தொகை கொண்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் உள்ளனர்.
- நாட்டிலேயே கர்நாடகாவில் மட்டும் தான் சாதி வாரி கணக்கெடுப்பு நடந்தி முடிந்துள்ளது.
திருப்பதி:
ஆந்திரா மாநில காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் நலன் பிரிவு தலைவராக நாகராஜு பதவியேற்பு விழா நேற்று மச்சிலிப்பட்டினத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷர்மிளா கலந்து கொண்டு பேசியதாவது:-
பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நரேந்திர மோடி பிரதமராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் மோடி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பெருமை சேர்க்கிறார். ஆனால் அவரது தலைமையிலான ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட சமூகம் குறிப்பிட்ட வளர்ச்சியை ஏற்றவில்லை. பா.ஜ.க உயர் சாதியினருக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கிறது. பிற்படுத்தப்பட்டவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
நாட்டின் 70 கோடி மக்கள் தொகை கொண்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் உள்ளனர். அவர்களின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும்.
நாட்டிலேயே கர்நாடகாவில் மட்டும் தான் சாதி வாரி கணக்கெடுப்பு நடந்தி முடிந்துள்ளது.
தெலுங்கானாவில் தற்போது தொடங்கி உள்ளனர். ஆந்திராவிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும் அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களும் சட்ட சபைக்கு செல்ல தைரியம் இல்லாமல் உள்ளனர். சட்டசபைக்கு செல்ல தைரியம் இல்லை என்றால் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அண்ணன், தங்கையான ஜெகன்மோகன் ரெட்டி, ஷர்மிளா இடையே சொத்து பிரச்சனை உள்ள நிலையில் ஷர்மிளா தாக்கி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.