இந்தியா

திருப்பதி லட்டு விற்பனையில் கட்டுப்பாடு

Published On 2024-09-03 05:19 GMT   |   Update On 2024-09-03 05:19 GMT
  • புனிதமாக வழங்கக்கூடிய பிரசாதத்தை சுவீட் கடையில் விற்கப்படும் இனிப்பு போல வைக்கப்பட்டுள்ளது.
  • எந்தவித சாமி தரிசனமும் செய்யாமல் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் லட்டுகள் வரை புரோக்கர்கள் மூலம் வாங்கப்படுகிறது.

திருப்பதி:

தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் கூறியதாவது:-

திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக வரக்கூடிய பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க இலவச சர்வ தரிசன டோக்கன்கள் வாரத்திற்கு 1 லட்சத்து 5 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தது. இதை 1 லட்சத்து 60 ஆயிரம் டோக்கன்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.

இதனை சிலர் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தங்களின் சுய கவுரவத்திற்காக காட்சி பொருளாக இனிப்புடன் வைக்க கூடிய பண்பாடு அதிகரித்து வருகிறது.

இதற்காக புரோக்கர்கள் மூலம் அதிக விலைக்கு இந்த லட்டுகளை வாங்கி செல்கின்றனர். நானே ஐதராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அதில் லட்டு பிரசாதம் காட்சிக்காக வைக்கப்பட்டிருப்பதை பார்த்து கவலையடைந்தேன்.

புனிதமாக வழங்கக்கூடிய பிரசாதத்தை சுவீட் கடையில் விற்கப்படும் இனிப்பு போல வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வதை தடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

மேலும் ஒரு நாளைக்கு 3.5 லட்சம் லட்டுகள் பக்தர்களுக்கு விற்பனைக்காக கவுன்டர்களில் வைக்கப்படுகிறது. இதில் சாமி தரிசனம் செய்யக்கூடிய பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுவதோடு கூடுதலாக பக்தர்களின் தேவைக்கேற்ப வழங்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம். ஆனால் எந்தவித சாமி தரிசனமும் செய்யாமல் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் லட்டுகள் வரை புரோக்கர்கள் மூலம் வாங்கப்படுகிறது.

இதனால் தரிசனம் செய்யக்கூடிய பக்தர்களுக்கு ஒரு நாளைக்கு ஒருவருக்கு 3 லட்டுகளும், சாமி தரிசனமே செய்யாதவர்களில் ஒருவருக்கு 5 லட்டுகள் என பெற்று செல்லும் விதமாக உள்ளது. இதனால் சாமி தரிசனம் செய்யக்கூடிய பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதனை தடுக்க வேண்டும் என்பதற்காக, சாமி தரிசனம் செய்யாமல் வரக்கூடிய பக்தர்கள் ஆதார் கார்டு காண்பித்து 2 லட்டுகள் மட்டும் பெறும் விதமாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு தேவைக்கு ஏற்ப வழங்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News