ரூ. 5705 கோடி சொத்து மதிப்பு.. மோடியின் அமைச்சரவையில் பணக்கார எம்.பி. யார் தெரியுமா?
- தேர்தலில் வெற்றி பெற்று எம்.பியாகி புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 99 சதேவீதம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
- புதிய அமைச்சரவையில் இடப்பெற்றுள்ள 71 அமைச்சர்களில் 28 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் மொத்தம் உள்ள 543 இடங்களில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. கடந்த ஜூன் 9 ஆம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார். அவருடன் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 71 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இந்த தேர்தலில் என்.டி.ஏ கூட்டணிக்கு வலுவான போட்டியை வழங்கிய காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 235 இடங்களைக் கைப்பற்றி பாராளுமன்றத்தில் வலுவான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளது.
இந்த தேர்தலில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி சார்பில் நட்சத்திர வேட்பாளர்களும் கோடீஸ்வர வேட்ப்பாளர்களும் அதிகம் களமிறக்கப்பட்டனர். அந்த வகையில் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பியாகி புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 99 சதேவீதம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அதில் 6 பேருக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளது.
ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, 71 அமைச்சர்களில் 70 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர், அவர்களின் சொத்துமதிப்பு சராசரியாக ரூ.107.94 கோடியாக உள்ளது. குறிப்பாக என்.டி.ஏ கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் சார்பில் ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சராகியுள்ள சந்திர சேகர பெம்மசானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.5705.47 கோடியாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக புதிய அமைச்சரவையில் இடப்பெற்றுள்ள 71 அமைச்சர்களில் 28 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.