இந்தியா

விபரீதத்தில் முடிந்த LUNCH PERIOD சண்டை.. ராஜஸ்தானில் கலவரம் - மாணவனின் வீடு இடிப்பு

Published On 2024-08-18 02:37 GMT   |   Update On 2024-08-18 02:38 GMT
  • வாகனங்களைப் போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்து ஒருவர் மீது ஒருவர் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
  • மாணவர்கள் பள்ளிகளுக்கு கூர்மையான பொருட்களை கொண்டு செல்ல தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

விபரீதத்தில் முடித்த லன்ச் பீரியட் சண்டை 

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவனை சக மாணவன் கத்தியால் குத்திய சம்பவத்தால் அங்கு கலவரம் ஏற்பட்டுள்ளது. பள்ளியில் உணவு இடைவேளையின்போது இரு மாணவர்களும் சண்டையிட்டுக் கொண்டதாகவும், அப்போது ஒரு மாணவன் மற்றொரு மாணவனின் தொடையில் கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மாணவனைப் பள்ளி நிர்வாகத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மதக் கலவரமாக மாறும் அபாயம் 

கத்தியால் குத்திய மாணவன் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அங்கு இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளது. பள்ளி அமைந்துள்ள மதுபன் பகுதியில் உள்ள வாகனங்களைப் போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

144 தடை 

தாக்கப்பட்ட சிறுவன் ஐசியுவில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் உதய்ப்பூர் பகுதியில் இந்து அமைப்பினர் மற்றும் இஸ்லாமிய தரப்புக்கு இடையில் வெடித்துள்ள மோதல் மதக் கலவரமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உதய்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வதந்திகள் பரவாமல் இருக்க இணையசேவை துண்டிக்கப்பட்டது. கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர அப்பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.

பள்ளிகளில் கூர்மையான பொருட்கள் 

இதற்கிடையே ராஜஸ்தானில் மாணவர்கள் பள்ளிகளுக்கு கூர்மையான பொருட்களை கொண்டு செல்ல தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆசிரியர்கள் தினமும் மாணவர்களின் புத்தகப் பைகளை சோதனை செய்ய வேண்டும் எனவும், யாராவது கூர்மையான பொருட்களை கொண்டு வந்திருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புல்டோசர் நடவடிக்கை 

கத்தியால் குத்திய மாணவனையும், அவனது தந்தையையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட மாணவனின் குடும்பம் குடியிருந்த வீட்டை மாவட்ட நிர்வாகம் ஜேசிபி இயந்திரங்களால் இடித்து தரைமட்டமாக்கி உள்ளது. அரசுக்கு சொந்தமாக இடத்தில் வீடு கட்டப்பட்டுள்ளதால் முறையாக நோட்டீஸ் கொடுத்து விதிகளின்படி வீடு இடிக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால் கலவரங்கள் ஓயாத நிலையில் மாணவனின் வீட்டை இடித்த சம்பவம் சூழலை மேலும் மோசமாக்குவதாக அமைத்துள்ளது. 

Tags:    

Similar News