சொகுசு கப்பல் பீகாரில் தரைதட்டவில்லை, திட்டமிட்டபடி பயணிக்கிறது: நீர்வழி ஆணையம் தகவல்
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில பேரிடர் மீட்புப் படை படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன
- தண்ணீர் அதிகமாக இருக்கும் பிரதான கால்வாயில் சொகுசு கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது.
சாப்ரா:
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி கடந்த 13ம் தேதி நதிவழி சொகுசு கப்பலான கங்கா விலாஸ் கப்பல் பயணத்தை தொடங்கி வைத்தார். இந்த சொகுசு கப்பல் வங்காளதேசம் வழியாக அசாமில் உள்ள திப்ருகரை சென்றடையும். அனைத்து ஆடம்பர வசதிகளுடன், 36 சுற்றுலாப் பயணிகள் தங்கும் வசதியுடன், 18 அறைகள் கப்பலில் உள்ளன. இது தவிர, 40 பணியாளர்கள் தங்கும் வசதியும் உள்ளது.
இந்த சொகுசு கப்பல் பீகாரின் சாப்ரா பகுதியில் ஆழமற்ற நதியில் பயணித்த போது தரை தட்டி நின்றதாகவும், கப்பலில் இருந்த சுற்றுலா பயணிகள் சிறிய படகுகள் மூலம் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. அவர்கள் தொல்லியல் தளமான சிராந்த் சரண் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கங்கா விலாஸ் கப்பல், சாப்ராவில் சிக்கவில்லை என்று இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் கூறி உள்ளது.
'சொகுசு கப்பல் திட்டமிட்டபடி பாட்னாவை அடைந்தது. சாப்ராவில் கப்பல் சிக்கியதாக வெளியான செய்தியில் முற்றிலும் உண்மை இல்லை. திட்டமிட்டபடி கப்பல் அதன் பயணத்தைத் தொடரும்' என சஞ்சய் பந்தோபாத்யாய் கூறியதாக மேற்கோள் காட்டி இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
'நான் கூறிய தகவலை உள்ளூர் ஊடகவியலாளர்கள் தவறாக புரிந்துகொண்டு செய்தி வெளியிட்டுள்ளார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில பேரிடர் மீட்புப் படை படகுகள் அந்த இடத்தில் இருந்தன என்று நான் சொன்னேன். கப்பலுக்கு எந்தவித தடங்கலும் இல்லை', என சாப்ரா அதிகாரி சதேந்திர சிங் கூறினார்.
'நதி ஆழமாக இல்லாத பகுதியில் சுற்றுலா தலத்தைப் பார்க்கவேண்டுமானால், கப்பலை ஆழமான பகுதியில் நிறுத்திவிட்டு, அங்கிருந்து சுற்றுலாப் பயணிகள் சென்றுவர, ஆழமற்ற பகுதியில் பயணிக்கும் படகுகளைப் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் அதிகமாக இருக்கும் பிரதான கால்வாயில் கப்பல் நிறுத்தப்பட்டது. இதுதான் இங்கு நடந்தது. இது வழக்கமான நடைமுறை. இது சாதாரண விஷயம்தான்' என அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார்.