பஸ் திருடனை காட்டி கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு- ஆந்திர போலீசார் அறிவிப்பால் பரபரப்பு
- போலீசார் பஸ்சில் பொருத்தப்பட்டு இருந்த ஜி.பி.ஆர்.எஸ் கருவி மூலம் நாயுடு பேட்டையில் பஸ்சை மீட்டனர்.
- 94910-86022, 94407-96770 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக ரூ.2 கோடி மதிப்பிலான இலவச மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த 24-ந் தேதி இரவு தேவஸ்தானத்துக்கு சொந்தமான மின்சார பஸ்சை டிரைவர் திருமலை பஸ் நிலையத்தில் நிறுத்தினார். அவர் ஓய்வு அறையில் தூங்கிக் கொண்டு இருந்தார்.
அதிகாலை வந்த மர்ம நபர் ஒருவர் பஸ்சை திருடிக்கொண்டு திருப்பதி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டி சென்றார்.
நாயுடு பேட்டை என்ற இடத்தில் பஸ் சென்ற போது பேட்டரி சார்ஜ் தீர்ந்து விட்டது. இதனால் பஸ்சை தொடர்ந்து இயக்க முடியவில்லை. இதனால் செய்வது அறியாமல் திகைத்த மர்ம நபர் பஸ்சை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி சென்றார்.
பஸ் காணாமல் போனதை அறிந்த டிரைவர் திருப்பதி தேவஸ்தான போக்குவரத்து அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து திருமலை போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் பஸ்சில் பொருத்தப்பட்டு இருந்த ஜி.பி.ஆர்.எஸ் கருவி மூலம் நாயுடு பேட்டையில் பஸ்சை மீட்டனர்.
பஸ் சென்ற பாதையில் உள்ள கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 19 வயதுடைய வாலிபர் பஸ்சை ஓட்டி சென்றது தெரியவந்தது.
ஆனால் அவருடைய இருப்பிடத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து போலீசார் வாலிபர் போட்டோவை வெளியிட்டு அவரை காட்டி கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும்.
மேலும் 94910-86022, 94407-96770 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.