கழிவறைக்கு மாதம் ரூ.25 வரி விதிப்பு- இமாச்சலபிரதேச அரசு உத்தரவு
- ஒவ்வொரு கழிவறைக்கும் ரூ. 25 கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புதிய வரி விதிப்புக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இமாச்சல பிரதேசம்:
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் நகர்ப்புறங்களில் உள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய வரியை அரசு அறிவித்துள்ளது.
இந்த புதிய விதியின் கீழ், மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள ஒவ்வொரு கழிப்பறைக்கும் மாதாந்திர கட்டணம் செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு கழிவறைக்கும் ரூ. 25 கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாநிலம் முழுவதும் சுமார் 10 லட்சம் குடியிருப்பாளர்களை பாதிக்கும் ஒரு முடிவாகும்.
இந்த கட்டணம் ஏற்கனவே செலுத்தி வரும் கழிவுநீர் வடிகால் கட்டணத்துடன் சேர்க்கப்படும் என்றும், சேகரிக்கப்பட்ட தொகை ஜல் சக்தி துறைக்கு செலுத்தப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
பல நகர்ப்புற வீடுகளில் பல கழிப்பறைகள் இருப்பதால் நகர்ப்புறங்களில் இந்த வரி குறிப்பாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது, கழிவறை கட்டுவது அவசியம் என்று அரசு ஒருபக்கம் விழிப்புணர்வை ஏற்படுத்திவந்தது. இப்போது கழிப்பறைக்கு வரி போடப்படுகிறது. இதனால் குடும்பங்களுக்கு நிதி சுமை அதிகரிக்கிறது.
இந்த புதிய வரி விதிப்புக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.