கூடுதல் விலைக்கு மது விற்றால் ரூ.5 லட்சம் அபராதம்- சந்திரபாபு நாயுடு
- ஆந்திர மாநிலத்தில் மது கடைகள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளன.
- விலை பட்டியலை மதுக்கடைகளில் கட்டாயம் வைக்க வேண்டும்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் மது கடைகள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளன. ஏலம் மூலம் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாநிலம் முழுவதும் தனியார் மது கடைகள் திறக்கப்பட்டன.
இந்த மதுக்கடைகளில் அரசு நிர்ணயித்துள்ள விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் அரசு அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பேசுகையில், `மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யக்கூடாது.
அரசு நிர்ணயித்துள்ள விலை பட்டியலை மதுக்கடைகளில் கட்டாயம் வைக்க வேண்டும். அனைத்து மது கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.
மது பிரியர்கள் புகார் செய்வதற்காக கட்டணமில்லா தொலைபேசி வசதியை ஏற்படுத்தி, அந்த எண்ணை மது கடைகள் முன்பு எழுதி வைக்க வேண்டும்.
மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடையின் உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து தவறு செய்தால் அவருடைய உரிமம் ரத்து செய்யப்படும்.
கள்ளத்தனமாக மது விற்பனையை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.