பெங்களூரு விமான நிலையத்தில் வாலிபரிடம் இருந்து ரூ.55 லட்சம் மதிப்பிலான தங்க பேஸ்ட் பறிமுதல்
- விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் விமான நுழைவு வாயில் வழியாக வெளியே வந்து கொண்டிருந்தனர்.
- வாலிபர் மீது கடத்தல் மற்றும் சுங்க வரி ஏய்ப்பு செய்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூரு:
துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் விமான நுழைவு வாயில் வழியாக வெளியே வந்து கொண்டிருந்தனர். அப்போது குடகு பகுதியை சேர்ந்த 24 வயது பயணி ஒருவர் வழக்கத்திற்கு மாறாக சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கவனித்தனர்,
அவரது பொருட்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். பின்னர் அவர் அணிந்திருந்த கருப்பு நிற ஜீன்ஸ் பேண்டை ஆய்வு செய்ததில் இடுப்புப் பகுதியில் தங்கத்தை பேஸ்டாக உருவாக்கி அதன் மேல் ஜீன்ஸ் துணியை வைத்து தைத்து கடத்தி கொண்டு வந்துள்ளதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவர் வைத்திருந்த சூட்கேசில் சோதனை செய்யப்பட்டது. அதில் இருந்த உள்ளாடைகளில் இதுபோல் தங்கத்தை பேஸ்டாக மாற்றி ஒட்டி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்து ரூ. 55 லட்சம் மதிப்புள்ள 907 கிராம் தங்க பேஸ்டை கைப்பற்றிய போலீசார் அவர் மீது கடத்தல் மற்றும் சுங்க வரி ஏய்ப்பு செய்ததாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.