இந்தியா

பெண்களுக்கு மாதம் ரூ.3,000, இலவச பஸ் பயணம்- காங்கிரஸ் கூட்டணி தோ்தல் வாக்குறுதி

Published On 2024-11-07 06:19 GMT   |   Update On 2024-11-07 06:36 GMT
  • உணவுப் பொருள்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பயிா்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

மும்பை:

288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் வருகிற 20-ந் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தோ்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் ஆளும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா-பா.ஜ.க. துணை முதல்-மந்திரி அஜீத் பவாா் தலைமையிலான தேசிய வாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்ற மகா யுதி கூட்டணிக்கும், எதிரணியான காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், மும்பையில் காங்கிரஸ் கூட்டணியின் கூட்டு பிரசாரக் கூட்டம் நேற்று (புதன் கிழமை) நடைபெற்றது.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) தலைவா் சரத் பவாா், சிவசேனா (உத்தவ்) கட்சியின் தலைவா் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கூட்டணியின் தோ்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டன. 'மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மாநி லத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பு நீக்கப்படும்.

பெண்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படுவதோடு, அவா்கள் பஸ்களில் இலவசமாக பயணிக்கும் திட்டம் தொடங்கப்படும். கிருஷி சம்ருத்தி திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரையிலான பயிா்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும். மக்களுக்கு ரூ.25 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு அளிக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

'நாட்டில் தற்போது நடைபெறும் அரசியல், பா.ஜ.க. -ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களுக்கும் 'இந்தியா கூட்டணி' கட்சிகளுக்கும் இடையிலான போா்' என்று ராகுல் காந்தி பேசினாா்.

பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் மகாராஷ்டிரம் அனைத்து நிலையிலும் வீழ்ச்சிகண்டு விட்டது என்று சரத்பவாா் குற்றம்சாட்டினாா்.

மகாராஷ்டிரத்தில் சமையல் எண்ணெய், சா்க்கரை, அரிசி, கோதுமை, பருப்பு ஆகிய அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தவ் தாக்கரே உறுதியளித்தாா்.

மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி அரசு சாா்பில் பெண்களுக்கு ஏற்கெனவே மாதம் ரூ.1,500 உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதை ரூ.2,100-ஆக உயா்த்துவோம் என்று ஆளும் கூட்டணி வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News