இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு- முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதி

Published On 2024-05-14 03:55 GMT   |   Update On 2024-05-14 03:55 GMT
  • நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாளபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறும்.
  • 5 நாட்களும் காலை முதல் மதியம் வரையிலும், மாலை முதல் இரவு வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும் நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுவார்கள்.

திருவனந்தபுரம்:

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்ற தாகும். இந்த சீசன் காலத்தில் 2 மாதங்களுக்கு மேலாக கோவில் நடை திறந்திருக்கும்.

அப்போது ஐயப்ப சுவாமிக்கு விரதம் இருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். மண்டல மற்றும் மகரவிளக்கு சீசன் மட்டுமின்றி ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும்.

அதன்படி வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.

அதன் பிறகு பதினெட்டாம் படிக்கு அருகே உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். இன்று மாலை நடை திறந்த பிறகு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவில் அரிவராசனம் பாடப்பட்டு நடை சாத்தப்படும். பின்பு நாளை (15-ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.

நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாளபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறும். அது மட்டுமின்றி நாளை முதல் வருகிற 19-ந்தேதி வரை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

இந்த 5 நாட்களும் காலை முதல் மதியம் வரையிலும், மாலை முதல் இரவு வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும் நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுவார்கள். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 19-ந்தேதி இரவில் அத்தாள பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10:30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப் படுவதை முன்னிட்டு கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பம்பைக்கு பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட் டுள்ளன.

வருகிற 19-ந்தேதி அன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிலை பிரதிஷ்டை தின விழாவும் நடைபெற உள்ளது குறிப்பிட த்தக்கது. 

Tags:    

Similar News