இந்தியா

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

Published On 2024-02-13 04:35 GMT   |   Update On 2024-02-13 04:35 GMT
  • நிர்மால்ய தரிசனம் மற்றும் அபிஷேகமும், தொடர்ந்து கணபதி ஹோமமும் நடை பெறுகிறது.
  • பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும்.

திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக திறக்கப்படும் நிலையில், மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அப்போதும் நெய் அபிஷேகம் உள்ளிட்ட அனைத்து பூஜைகளும் நடத்தப்படும்.

மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை முடிந்து கடந்தமாதம் (ஜனவரி) 21-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்ட நிலையில், மாசி மாத பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5மணிக்கு திறக்கப்படுகிறது.

கோவில் தந்திர கண்ட ரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி மகேஷ், கோவில்நடையை திறந்துவைத்து தீபம் ஏற்றுகிறார். பின்பு பதினெட்டாம் படியில் இறங்கி உள்முற்றத்தில் உள்ள ஹோமகுண்டத்தில் தீ மூட்டுவார். இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

இரவில் ஹரிவராசனம் பாடப்பட்டு நடை சாத்தப்படும். நாளை(14-ந்தேதி) முதல் வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை வழக்கமான பூஜைகள் அனைத்தும் நடத்தப்படும். நாளை அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடைதிறக்கப்படும். பின்பு அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம் மற்றும் அபிஷேகமும், தொடர்ந்து கணபதி ஹோமமும் நடை பெறுகிறது.

அதுமட்டுமின்றி நாளை முதல் தொடர்ந்து 5 நாட்களும் படிபூஜை, அஷ்டாபிஷேகம், உதயாஸ்த மன பூஜை உள்ளிட் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். அந்த 5 நாட்களும் பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தலாம். தினமும் காலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலும், காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும் நெய்யபிஷேகம் நடைபெறும்.

மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். மாலை 6.30 மணிக்கு தீபாராதனையும், தொடர்ந்து படிபூஜை மற்றும் புஷ்பாபிஷேகமும், 6.45 மணிக்கு அத்தாழ பூஜையும் நடைபெறும்.

பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் உடனடி முன்பதிவு செய்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பம்பையில் உடனடி முன்பதிவு கவுண்டர்கள் செயல்படுகின்றன.

மாசி மாத பூஜை வருகிற 18-ந்தேதி முடிகிறது. அன்றுஇரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். அதன்பிறகு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பங்குனி மாத பூஜைக்காக அடுத்தமாதம்(மார்ச்) 13-ந்தேதி மீண்டும் திறக்கப்படும்.

Tags:    

Similar News