சாகித்ய அகாடமி பரிசுத் தொகை உயர்த்தி வழங்கப்படுமா?
- பல தமிழ் எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளனர்.
- சாகித்ய அகாடமி விருதுடன் ரூ.1,00,000 வழங்கப்படுகிறது.
சாகித்ய அகாடமி விருது என்பது இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் கௌரவமான விருது. அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளில் வெளியிடப்பட்ட இலக்கியத் தகுதியின் மிகச் சிறந்த புத்தகங்களுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.
சாகித்ய அகாடமியானது 1954 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி இந்திய அரசால் இலக்கிய உரையாடல், வெளியீடு மற்றும் ஊக்குவிப்புக்கான மைய நிறுவனமாக தொடங்கப்பட்டது. ஆங்கிலம் உட்பட 24 இந்திய மொழிகளில் இலக்கிய விருதாக சாகித்ய அகாடமி வழங்கப்படுகிறது.
இந்த விருதை தமிழில் பல எழுத்தாளர்கள் ஒவ்வொரு வருடமும் பெறுகிறார்கள். கல்கி, பாரதிதாசன், கண்ணதாசன், ஜெயகாந்தன், எஸ்.செல்லப்பா, பிரபஞ்சன் மற்றும் பல தமிழ் எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளனர்.
மேலும், சாகித்ய அகாடமி விருதுடன் சேர்த்து 2009-லிருந்து ரொக்கப் பரிசாக ரூ.1,00,000 வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 14 ஆண்டுகளாக பரிசுத் தொகையில் மாற்றம் இல்லாமல் அதே ரூ.1,00,000 வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, சாகித்ய அகாடமி விருதுடன் வழங்கப்படும் பரிசுத் தொகையை மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.