இந்தியா

புதுச்சேரி தலைமை செயலாளராக சரத் சவுகான் நியமனம்

Published On 2024-01-29 16:21 GMT   |   Update On 2024-01-29 16:21 GMT
  • அரசு சார்பில் அனுப்பப்படும் கோப்புகளை பல்வேறு கேள்விகள் கேட்டு தலைமை செயலாளர் திருப்பி அனுப்புவதாக குற்றசாட்டு.
  • அருணாச்சலப்பிரதேசத்தில் அரசு அதிகாரியாக பணியாற்றி வந்த சரத் சவுகான் புதுச்சேரி தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, தலைமை செயலாளர் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை என புகார்கள் எழுந்து வந்தன. மேலும் அரசு சார்பில் அனுப்பப்படும் கோப்புகளை பல்வேறு கேள்விகள் கேட்டு திருப்பி அனுப்புவதாகவும் கூறப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து, அரசுக்கு ஒத்துழைப்பு தராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் செல்வம் எச்சரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் மத்திய அரசிடம் புகார் தெரிவித்திருந்தனர். சமீபத்தில் நிதித்துறை செயலாளரும், தலைமை தேர்தல் அதிகாரியுமான ஜவகரை தேர்தல் துறை தவிர மற்ற அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜீவ் வர்மா விடுவித்தார்.

இதுதொடர்பாக தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, முதலமைச்சர் ரங்கசாமியிடம் ஆலோசிக்காமல் இந்த உத்தரவை பிறப்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை செயலாளருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே தலைமை செயலாளர் ராஜீவ் வர்மாவும் தன்னை இடமாற்றம் செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், அருணாச்சலப்பிரதேசத்தில் அரசு அதிகாரியாக பணியாற்றி வந்த சரத் சவுகான் புதுச்சேரி தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமை செயலாளராக பதவி வகித்து வந்த ராஜீவ் வர்மா சண்டிகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் புதுச்சேரி மாவட்ட ஆட்சியராக இருந்த வல்லவன் கோவா-விற்கும், துணைநிலை ஆளுநரின் செயலாளராக இருந்த சவுத்ரி அபிஜித் விஜய் சண்டிகருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News