ஜி20 ஷெர்பா அமிதாப் காந்துக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் புகழாரம்
- போர் குறித்த கருத்து வேறுபாட்டால் கூட்டறிக்கை வரைவு முடிவாகாமல் இருந்தது
- 200 மணிநேர பேச்சுவார்த்தை, 300 சந்திப்புகள், 15 வரைவறிக்கைகள் தேவைப்பட்டது
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கேரள மாநில திருவனந்தபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர், சசி தரூர் (67). மூத்த அரசியல்வாதியான இவர், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த பா.ஜ.க. அரசு எடுக்கும் பல முடிவுகள் குறித்து உலக அரங்கில் முன்வைக்கும் விமர்சனங்கள் மிகவும் பிரபலமாக பேசப்படும்.
ஜி20 கூட்டமைப்பின் 18-வது இரண்டு நாள் உச்சி மாநாடு இந்தியாவின் தலைமையில் இந்திய தலைநகர் புது டெல்லியில் நேற்று தொடங்கி இன்றுடன் நிறைவடைகிறது. ரஷிய உக்ரைன் போரின் காரணமாக இம்மாநாட்டின் சார்பாக தலைவர்களின் கூட்டறிக்கை வரைவதில் கருத்தொற்றுமை ஏற்படாமல் இருந்ததாக தகவல்கள் வெளியாகின.
இம்முறை இந்தியா தலைமையில் இந்த மாநாடு நடைபெறுவதால் கூட்டறிக்கை தாமதமானாலோ அல்லது இடம் பெறாமல் போனாலோ நாட்டிற்கு பின்னடைவாக கருதப்படலாம் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஆனால் நேற்று மாலை, அனைத்து தலைவர்களின் 100 சதவீத சம்மதத்துடன் அறிக்கை தயாரானதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இதனையடுத்து, டெல்லி பிரகடனம் எனும் பெயரில் அந்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
200 மணி நேர பேச்சுவார்த்தை, 300-க்கும் மேற்பட்ட இருதரப்பு சந்திப்புகள் மற்றும் உலக பிரதிநிதிகளின் பரிசீலனைக்காக 15-க்கும் மேற்பட்ட வரைவறிக்கைகள் என கடின உழைப்பிற்கு பிறகே இது சாத்தியமானதாக இம்மாநாட்டின் ஷெர்பா எனப்படும் ஒருங்கிணைப்பாளர் அமிதாப் காந்த் சமூக வலைதளங்களில் தெரிவித்தார்.
இதனையறிந்த மூத்த காங்கிரஸ் தலைவரான சசி தரூர் இந்த முயற்சிகளை வெகுவாக பாராட்டினார். தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள கணக்கில், அமிதாப் காந்த் வெளியிட்டுள்ள செய்தியை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
"சிறப்பாக பணி புரிந்துள்ளீர்கள் காந்த். வாழ்த்துக்கள். நீங்கள் சிவில் சேவைக்கான தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய வெளியுறவு துறை (ஐஎஃப்எஸ்) பணிக்கு பதில் இந்திய ஆட்சிப் பணியை (ஐஏஎஸ்) தேர்வு செய்ததன் மூலம் ஐஎஃப்எஸ் ஒரு திறமையான அதிகாரியை இழந்து விட்டது. இந்தியாவிற்கு ஜி20 மாநாட்டில் இது ஒரு அற்புதமான தருணம்."
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.