இந்தியா

இந்து மதம் குறித்த சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்க மாட்டேன்- சதீஷ் ஜார்கிகோளி திட்டவட்டம்

Published On 2022-11-09 04:01 GMT   |   Update On 2022-11-09 04:01 GMT
  • சதீஷ் ஜார்கிகோளி மூடநம்பிக்கைக்கு எதிரானவர்.
  • நான் கூறியுள்ள கருத்துகள் தவறானவை என்று நிரூபித்தால் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயார்.

பெங்களூரு :

இந்து மதம் குறித்த காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சதீஷ் ஜார்கிகோளியின் சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவர் மன்னிப்பு கேட்க பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.

கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவராக இருப்பவர் சதீஷ் ஜார்கிகோளி.இவர் நேற்று முன்தினம் பெலகாவியில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, இந்து என்ற சொல் பார்சியன் மொழியை சேர்ந்தது என்றும், அந்த சொல் ஈரான், ஈராக், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்தது என்றும், இந்து என்ற சொல்லுக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்றும் பேசி இருந்தார்.

மேலும், இந்து என்ற சொல்லின் அர்த்தம் மோசமானது என்றும் தெரிவித்து இருந்தார். இந்து குறித்த அவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கண்டித்ததுடன் இந்து மதம் குறித்த விஷயத்தில் காங்கிரசுக்கு உயரிய மரியாதை உள்ளதாக தெரிவித்தார். இதற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பெலகாவியில் நேற்று காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சதீஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இந்து மதம் குறித்து நான் கூறிய கருத்துகள் யாவும் என்னுடைய சொந்த கருத்து கிடையாது. அதுபற்றி விவாதம் நடைபெறட்டும் என்று சொன்னேன். அது தான் எனது நோக்கம். ஆனால் சிலர் தங்களுக்கு ஏற்றபடி எனது கருத்தை புரிந்து கொண்டு விமர்சித்துள்ளனர். இதுபற்றி என்னால் எதுவும் செய்ய முடியாது.

நான் ஆதாரங்களுடன் விவாதத்திற்கு தயாராக உள்ளேன். யாராவது நான் கூறியுள்ள கருத்துகள் தவறானவை என்று நிரூபித்தால் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயார். நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்க மாட்டேன்.

இதுகுறித்து முதல்-மந்திரி ஒரு குழு அமைக்கட்டும். நான் என்ன கூறினேன் என்பது குறித்த விஷயத்தில் உண்மையை கண்டறிய வேண்டும். நான் கூறிய கருத்துகள் அனைத்தும் புத்தகத்தில் எழுதி வெளியிடப்பட்டவை. என்னை குறை சொல்கிறவர்கள், அந்த புத்தகத்தை பார்த்து தங்களை சரிசெய்து கொள்ள வேண்டும்.

அவர்கள் என்ன செய்திருக்க வேண்டுமோ அதை நான் செய்துள்ளேன். இதற்காக அவர்கள் எனக்கு நன்றி கூற வேண்டும். மனுவாதிகள் உள்பட சிலர் என்னை இலக்காக கொண்டு செயல்படுகிறார்கள்.

இவ்வாறு சதீஷ் ஜார்கிகோளி கூறினார்.

சதீஷ் ஜார்கிகோளி மூடநம்பிக்கைக்கு எதிரானவர். இவர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் கலால்துறை மந்திரியாக பணியாற்றினார் என்பதும், அவர் மந்திரியாக இருந்தபோது, பெலகாவியில் மயானத்தில் நிகழ்ச்சி நடத்தி அங்கேயே உணவு சாப்பிட்டு இரவில் தங்கி பேய்கள் குறித்த எண்ணம் மூடநம்பிக்கை என்று சொன்னார் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

Tags:    

Similar News