ராகுல் காந்தியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த சரிதா நாயரின் மனு தள்ளுபடி
- வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.
- ராகுல் காந்தியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சரிதா நாயரின் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
திருவனந்தபுரம்:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. கடந்த பாராளுமன்ற தேர்தலில் இவர் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அவரை எதிர்த்து சரிதா நாயர் போட்டியிட்டார்.
இவர் கேரளாவில் நடந்த சோலார் பேனல் மோசடி வழக்கில் தொடர்புடையவர். மேலும் இது தொடர்பான 2 வழக்குகளில் 3 ஆண்டு தண்டனை பெற்றவர். எனவே இவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்தும், தனது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை கண்டித்தும் சரிதா நாயர் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் சரிதா நாயரின் வக்கீல் இதற்கு முன்பு நடந்த விசாரணையின்போது ஆஜராகாதது ஏன்? என்று விசாரித்தனர்.
அதற்கு தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக வீடியோ கான்பரன்சிங் விசாரணையில் பங்கேற்க இயலவில்லை என சரிதா நாயர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த கோர்ட்டு, ராகுல் காந்தியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சரிதா நாயரின் மனுவை தள்ளுபடி செய்தது.
மேலும் சரிதா நாயருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பதாகவும் உத்தரவில் குறிப்பிட்டு இருந்தனர்.