நூபுர் சர்மா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவு
- நூபுர் சர்மா பங்கேற்ற தொலைக்காட்சி விவாதத்தை நாங்கள் பார்த்தோம். அவரது வாதம் பொறுப்பற்ற வகையில் இருந்தது.
- நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அது தொடர்பாக நூபுர் சர்மா எப்படி பேச முடியும்?
புதுடெல்லி:
தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய டெல்லி பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா இறைதூதர் முகமது நபி பற்றி தெரிவித்த கருத்துக்கள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
முக்கிய நகரங்களில் வன்முறை வெடித்தது. இதையடுத்து நூபுர் சர்மாவை கட்சி பதவியில் இருந்து பா.ஜனதா நீக்கியது.
இதற்கிடையே நூபுர் சர்மா மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு மாநிலங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் டெல்லிக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று நூபுர் சர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார்.
அவர் தனது மனுவில் வழக்கு விசாரணைக்காக வெளி மாநிலங்களுக்கு சென்றால் அது தனக்கு பாதுகாப்பாக இருக்காது என்று தெரிவித்திருந்தார். அவரது மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சூரியகாந்த் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது நீதிபதி சூர்யகாந்த் கருத்து தெரிவிக்கும்போது நூபுர் சர்மாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
நூபுர் சர்மா பங்கேற்ற தொலைக்காட்சி விவாதத்தை நாங்கள் பார்த்தோம். அவரது வாதம் பொறுப்பற்ற வகையில் இருந்தது. அதன்பிறகு அவர் நடந்துகொண்ட விதமும் வெட்கக்கேடாக காணப்பட்டது.
அவரது வக்கீல்களும் அவருக்கு ஆதரவாக செயல்படுவது வெட்கக்கேடானது. நூபுர் சர்மா தனக்கு எதிராக செயல்படுவதாக போலீசில் புகார் கொடுத்ததும், ஒருவரை கைது செய்தனர்.
ஆனால் நாடு முழுவதும் அவருக்கு எதிராக பல மாநிலங்களில் வழக்குகள் உள்ளன. என்றாலும் டெல்லி போலீசார் இன்னமும் அவரை கைது செய்யவில்லை.
உதய்பூரில் நடந்த கொலைக்கு நூபுர் சர்மாவின் பொறுப்பற்ற பேச்சுதான் காரணம். அவரது செயல்பாடுகளால் நாட்டில் இன்று இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அவரது தொலைக்காட்சி விவாதம் கண்டனத்துக்குரியது.
நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அது தொடர்பாக நூபுர் சர்மா எப்படி பேச முடியும்? அவர் பொறுப்பற்ற முறையில் பேசியதால் நாட்டுக்கு மிகப்பெரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன. அவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?
ஒரு கட்சியின் செய்தி தொடர்பாளராக இருப்பதால் அவர் எதையும் பேசிவிட முடியாது. அவருக்கு அந்த அதிகாரமும் இல்லை. ஜனநாயகம் எல்லோருக்கும் பேச்சுரிமை வழங்கியுள்ளது. ஆனால் அந்த உரிமையை தவறாக பயன்படுத்தக்கூடாது.
ஜனநாயக வரம்பை மீற இந்த கோர்ட்டு அனுமதிக்க முடியாது. சர்ச்சை ஏற்பட்டதும் அவர் தனது கருத்துக்களை திரும்ப பெறுவதாக சொல்வது மிக மிக தாமதமான முடிவாகும். நாட்டு மக்களின் உணர்வை நூபுர் சர்மா கண்டுகொள்ளாமல் புறம் தள்ளியுள்ளார்.
நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு நூபுர் சர்மா தனிப்பட்ட முறையில் பொறுப்பு ஏற்க வேண்டும். நாடு முழுவதும் அவர் மீது பதிவான வழக்குகள் கவனத்தில் கொள்ளப்படும். இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்.
ஒட்டுமொத்த நாட்டு மக்களிடமும் நூபுர் சர்மா முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். தொலைக்காட்சியில் நேரில் தோன்றி அவர் மன்னிப்பு கேட்பதுதான் நல்லது.
இவ்வாறு நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்தார்.
பொதுவாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் வழக்கு விசாரணையின்போது மிக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கண்டனம் தெரிவிப்பது இல்லை. ஆனால் நூபுர் சர்மா வழக்கு விவகாரத்தில் கடுமையான வார்த்தைகளை நீதிபதி பயன்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.