கன்வர் யாத்திரை கடைகளில் பெயர் பலகை வைக்கும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி தடை
- கன்வர் யாத்திரை நடைபெறும் பாதைகளில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் பெயரை எழுதி வைக்க வேண்டும்.
- பலகையில் உரிமையாளர் பெயரை எழுதி வைத்திருக்க வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை குறிப்பிட வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற மகாகாளேஸ்வர் கோவில் உள்ள உஜ்ஜைன் நகரிலும் இந்த விதியை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாநிலத்திலும் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது.
உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் கன்வர் யாத்திரை நடைபெறும் பாதைகளில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் பெயரை எழுதி வைக்க வேண்டும் என்று உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகளின் உத்தரவுகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
பெயர் பலகையில் உரிமையாளர் பெயரை எழுதி வைத்திருக்க வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது. கடைகளின் பெயர் பலகையில் உரிமையாளர் பெயர் கட்டாயம் எழுத வேண்டும் என உத்தரவிட்ட மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
உ.பி., உத்தரகாண்ட், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற உத்தரவில் தெரிவித்துள்ளது.