கேரளாவில் காட்டு யானை தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய பள்ளி மாணவர்கள்
- காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி புகுந்துவிடும்.
- பீர்மேடு பகுதியில் பள்ளி மாணவர்கள் சிலர் பஸ்சுக்காக காத்து நின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் வனப்பரப்பு அதிகமாக இருக்கிறது. மேலும் பல மாவட்டங்களில் ஏராளமான பகுதிகள் வனப்பகுதியை ஒட்டியபடி இருக்கிறது. அந்த இடங்களில் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி புகுந்துவிடும்.
இந்தநிலையில் அவ்வாறு ஊருக்குள் புகுந்த காட்டு யானை, பள்ளி மாணவர்களை தாக்க முயன்றிருக்கிறது. இதில் சாலை யோரம் பஸ்சுக்காக காத்து நின்ற பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பியிருக்கின்றனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
அங்குள்ள பீர்மேடு பகுதியில் பள்ளி மாணவர்கள் சிலர் பஸ்சுக்காக காத்து நின்றனர். அப்போது அங்கு ஒரு காட்டு யானை வந்தது. அது திடீரென மாணவர்களை நோக்கி வேகமாக ஓடி வந்தது. அதனை பார்த்த மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து சிதறி ஓடினர்.
மாணவர்களை தாக்க காட்டு யானை ஓடிவந்ததை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சத்தம் எழுப்பினர். இதனால் அந்த காட்டு யானை யூகலிப்டஸ் தோப்புக்குள் சென்றுவிட்டது.
பள்ளி மாணவர்களை காட்டு யானை தாக்க ஓடி வருவது மற்றும் யானையிடமிருந்து மாணவர்கள் தப்பி ஓடும் காட்சி அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.