டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டோரை விடுவித்தது எப்படி?- உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
- டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
- பட்டப்பகலில் நடந்த பயங்கரமான கொலை வழக்கில், சம்பந்தப்பட்ட அனைவரையுமே உயர்நீதிமன்றம் எவ்வாறு விடுவித்துள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு பிரபல நரம்பியல் மருத்துவரான டாக்டர் சுப்பையா வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
பட்டப்பகலில் நடுரோட்டில் அவரை சுற்றி வளைத்து கொலையாளிகள் வெட்டிக்கொன்றனர். எதிர் திசையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த வீடியோ காட்சிகளும் வெளியானதால் டாக்டர் சுப்பையா கொலை அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
இதுதொடர்பான வழக்கில், அரசு பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், என்ஜினீயரான போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து, கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
7 பேரும் மரண தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்திருந்தனர். ஆயுள் தண்டனையை எதிர்த்து மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோரும் மேல்முறையீடு செய்து இருந்தனர்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் நடைபெற்றது. டாக்டர் சுப்பையாவுக்கும், பொன்னுசாமிக்கும் இடையில் இருந்த நிலப்பிரச்சனை, கொலை சதி திட்டம் பற்றி போலீஸ் தரப்பில் விவரிக்கப்பட்டது.
கொலை செய்ய கூலிப்படையினருக்கு கொடுப்பதற்காக ரூ.7.5 லட்சம் பரிமாற்றம் செய்தது, அப்ரூவரானவரின் சாட்சியம் ஆகியவற்றையும் அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். 7 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை 2 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ஆகியவை ரத்து செய்து தீர்ப்பு அளித்தனர்.
இதனை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தமிழக அரசின் மேல் முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
டாக்டர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 9 பேரை விடுவித்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
டாக்டர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை உயர்நீதிமன்றம் எவ்வாறு விடுவித்தது. பட்டப்பகலில் நடந்த பயங்கரமான கொலை வழக்கில், சம்பந்தப்பட்ட அனைவரையுமே உயர்நீதிமன்றம் எவ்வாறு விடுவித்துள்ளது. இதுபோன்ற ஒரு சம்பவத்தை நாங்கள் கேள்பிப்பட்டதே இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து குற்றவாளிகளுக்கு நோட்டீஸ் வழங்கி 4 வாரங்களில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.