இந்தியா (National)

பள்ளி ஆசிரியர் குடும்பத்தோடு சுட்டுக் கொலை.. போலீசின் அலட்சியத்தால் பறிபோன 4 உயிர்கள்

Published On 2024-10-04 02:07 GMT   |   Update On 2024-10-04 02:07 GMT
  • தனது குடும்பத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு மாதத்துக்கு முன்பே போலீசில் புகார் அளித்திருந்தார்
  • சந்தன் வர்மா என்னிடம் அத்துமீற முயற்சித்தபோது மறுத்ததால் கன்னத்தில் அறைந்து சாதி பெயரை சொல்லி திட்டினான்.

உத்தரப் பிரதேசத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் குடும்பத்தோடு வீடு புகுந்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உ.பி மாநிலம் அமேதியில் பவானி நகர் பகுதியில் வீடு ஒன்றில் வசித்து வந்த அரசுப் பள்ளி ஆசிரியர் சுனில் குமார் [35 வயது], அவரது மனைவி பூனம் பாரதி மற்றும் இரு மகள்கள் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

தனது குடும்பத்துக்கு சந்தன் வர்மா என்ற நபரால் அச்சுறுத்தல் இருப்பதாக மனைவி பாரதி ஒரு மாதத்துக்கு முன்பே போலீசில் புகார் அளித்திருந்ததும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம், உடல் நிலை சரியில்லாத தனது மகளுக்கு மருந்து வாங்குவதற்காக ரேபரேலியில் உள்ள மருத்துவமனைக்கு பாரதியும் அவரது கணவர் சுனில் குமாரும் சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் சந்தன் வர்மா என்ற நபர் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக பாரதி தனது புகாரில் தெரிவித்துள்ளார். சந்தன் வர்மா என்னிடம் அத்துமீற முயற்சித்தபோது மறுத்ததால் என்னைக் கன்னத்தில் அறைந்தான், அப்போது அங்கு வந்த கணவரையும் என்னையும் சாதி பெயரை சொல்லி திட்டினான்.

நடந்ததைப் போலீசில் சொன்னால் குடும்பத்தே கொன்று விடுவதாக மிரட்டினான். எனவே எங்களது உயிருக்கு சந்தன் வர்மாவால் அச்சுறுத்தல் உள்ளது என்று SC/ST பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பாரதி கடந்த மாதம் போலீசில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். ஆனால் போலீஸ் அதை அலட்சியம் செய்ததாலேயே தற்போது இந்த கொலைகள் நடத்தக்கதாக கண்டனம் எழுந்துள்ளது. குற்றவாளிகள் இன்னும் கண்டறியப்படாத நிலையில் கொலைகளுக்கு விரைந்து நீதி வழங்கப்படும் என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

 

Tags:    

Similar News