சிறைவாசம் முடிவுக்கு வருமா? செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது நாளை காலை தீர்ப்பு
- ஓராண்டுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு
- ஜாமின் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14-ந்தேதி கைது செய்தது. ஓராண்டுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இடையில், தனது ஜாமின் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த பல்வேறு மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றமும் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுக்களை தொடர்ச்சியாக தள்ளுபடி செய்து வந்தது. இந்த நிலையில், தனக்கு ஜாமின் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையிடம் உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அதற்கு அமலாக்கத்துறை சார்பில் பதில் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், தான் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை காலை தீர்ப்பு வழங்க இருக்கிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது.