பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரம்: ராகுல் காந்தியிடம் எஸ்ஐடி விசாரணை நடத்த வேண்டும்- குமாரசாமி
- பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி வெளிப்படையாக பிரஜ்வல் ரேவண்ணாவை குற்றம்சாட்டியிருந்தார்.
- குற்றம்சாட்டிய ராகுல் காந்தியிடம் ஆதாரங்களை கேட்டு எஸ்ஐடி ஏன் சம்மன் அனுப்பவில்லை.
பல பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா இருப்பது போன்ற ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கர்நாடாக மாநில காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு (SIT) விசாரணை நடத்தி வருகிறது.
இந்த ஆபாச வீடியோ தொடர்பாக ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்துள்ள பா.ஜனதாவை காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். ஏழு நாட்களுக்குள் விசாரணைக்கு ஆஜராக எஸ்ஐடி சம்மன் அனுப்பியிருந்தத. அதன் அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
இதற்கிடையே ராகுல் காந்தி சிவமோகாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசும்போது, 16 வயது மைனர் உள்பட 400 பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்தில் பிரஜ்வல் ரேவண்ணா ஈடுபட்டுள்ளார் என வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் ஹெச்.டி. குமாரசாமி ராகுல் காந்தியிடம் எஸ்ஐடி விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஹெச்.டி. குமாரசாமி கூறியதாவது:-
ஷிவமோகாவில் நடைபெற்ற பொது கூட்டத்தின்போது, 400 பெண்கள் கற்பழிப்பில் பிரஜ்வால் ரேவண்ணா ஈடுபட்டதாக ராகுல் காந்தி, நேரடியாக குற்றம்சாட்டியுள்ளார். வயநாடு எம்.பி. நேரடியாக குற்றம் சாட்டியதன் மூலம் அவரிடம் இந்த விவகாரம் தொடர்பாக தகவல் மற்றும் ஆதாரங்கள் இருப்பது போல் பார்க்கப்படுகிறது. இது குற்றம்சாட்டிய நிலையில், அதற்கான ஆதாரங்களை அளிக்க வேண்டும் என எஸ்ஐடி ஏன் சம்மன் வழங்கவில்லை என்பது குழப்பமாக உள்ளது.
இந்த வழக்கில் நீதியை நிலைநாட்டுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். வீடியோ பரப்பப்பட்டதற்கான பொறுப்புள்ளவர்களும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியவர்கள். முதல்வர் தார்மீக கொள்கைகளை கடைபிடித்தால், சிவகுமாரை (பென் டிரைவ்கள் வினியோகம் செய்யப்படுவதற்கு முக்கிய சதிவேலையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு) அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும். சித்தராமையா-சிவகுமார் விசாரணைக் குழுவான எஸ்ஐடி இரண்டு தலைவர்களால் கையாளப்பட்டு வருகிறது.
ஏப்ரல் 26-ந்தேதி தேர்தல் நடைபெற இருந்த நிலையில் 26 ஆயிரம் பென் டிரைவ்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இது ஹசன் தொகுதிக்கு மட்டுமல்ல. பெங்களூரு புறநகர் மற்றும் மாண்டியாவுக்கும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21-ந்தேதி பிரஜ்வலின் போலிங் ஏஜென்ட், ஹசன் துணை கமிஷனர் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் நவீன் கவுடா, கார்த்திக் கவுடா, சேத்தன், புட்டண்ணா ஆகியோர் பென் டிரைவ்களை வினியோகம் செய்ததில் பின்னணியாக இருந்தவர்கள் என புகார் அளித்துள்ளார். எஸ்ஐடி அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அவர்களை ஏன் தப்பிக்க விட்டார்கள்? அவர்களுக்கு எதிராக ஏன் ப்ளூ கார்னர் இல்லை?
இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.