இமாச்சலில் மசூதியை ஒட்டிய ஆக்கிரமிப்பை இடிக்க வலியுறுத்தி போராட்டம்: போலீசாருடன் தள்ளுமுள்ளு- தடியடி
- சட்டவிரோதமாக மசூதி பகுதியில் கட்டப்பட்டதை இடிக்க வேண்டும் என வலியுறுத்தல்.
- போராட்டத்தின்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இமாச்சல பிரதேசம் சிம்லாவில் உள்ள சஞ்சௌலி என்ற இடத்தில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதியை ஒட்டி கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. சட்டவிரோதமாக இந்த கட்டுமான பணி நடைபெற்று வருவதாக இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதை இடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
இன்று நூற்றுக்கணக்கானோர் சப்சி மண்டி தல்லி என்ற இடத்தில் இருந்து சஞ்சௌலி நோக்கி பேரணி நடத்தினர். அப்போது ஜெய் ஸ்ரீ ராம், ஹிந்து ஒற்றுமை ஜிந்தாபாத் (Hindu Ekta Zindabad) என கோஷமிட்டனர். அவர்களை மசூதி அருகே செல்ல விடாமல் போலீசார் தடுப்பு அமைத்து தடுத்தனர்.
அப்போது தடுப்புகளை தாண்டி போராட்டக்காரர்கள் சென்றனர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் தடியடி நடத்தனர். அத்துடன் தண்ணீர் பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.