பஞ்சாப் மாநில சிவசேனா தலைவர் சுட்டுக் கொலை- காவல்துறை விசாரணை
- கோவில் அருகே கட்சி நிர்வாகிகளுடன் போராட்டம் நடத்திய போது துப்பாக்கியால் சுடப்பட்டார்.
- துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை கைது செய்து காவல்துறை விசாரணை.
அமிர்தசரஸ்:
பஞ்சாப் மாநில சிவசேனா கட்சித் தலைவர் சுதிர் சூரி அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில காவல்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன. அமிர்தசரஸ் நகரில் உள்ள கோபால் மந்திர் என்ற கோவில் அருகே இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூறப்படுகிறது.
அந்த கோவில் வளாகத்திற்கு வெளியே உள்ள குப்பையில் உடைந்த சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், இது குறித்து அறிந்த சூரி, தமது கட்சி நிர்வாகிகளுடன் அங்கு சென்று கோவில் அதிகாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் திடீரென அவர் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதையடுத்து குண்டு காயத்துடன மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சூரி உயிரிழந்ததாக அமிர்தசரஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.
குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அமிர்தசரஸ் நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.