நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலகினால் நானும் பதவி விலக தயார்- சித்தராமையா
- முடா நில ஒதுக்கீடு தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது மீது FIR பதியப்பட்டுள்ளது.
- தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது FIR பதியப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 'முடா' நில முறைகேடு தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு லோக் ஆயுக்தாவிற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் 3 பேர் அளித்த புகாரின் பேரில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஊழல் புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாருக்கு பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நில ஒதுக்கீடு புகாரில் ஜாமினில் உள்ள மத்திய அமைச்சர் குமாரசாமி ஆகியோர் முதலில் பதவி விலக வேண்டும். அவர்கள் பதவி விலகினால், நானும் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகத் தயார்" என்று தெரிவித்துள்ளார்.