null
காம்ரேட்களின் சிகரம் சரிந்தது.. சீதாராம் யெச்சூரி 72
- பல முறை ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி பிறந்த சீதாரம் யெச்சூரி நிமோனியா பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 23 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சீதாராம் யெச்சூரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னையில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர் சீதாராம் யெச்சூரி. இவரது பெற்றோர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். மாணவ பருவத்தில் இருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்து வரும் சீதாராம் யெச்சூரி மேற்கு வங்க மாநிலத்தில் பல முறை ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக 32 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். மாநிலங்களவையில் பல்வேறு விவகாரங்களில் தனது ஆற்றல் மிக்க பேச்சால் உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்தவர் சீதாராம் யெச்சூரி. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
ஐதராபாத்தில் வளர்ந்த யெச்சூரி ஆல் செயின்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை பயின்றார். அதன்பிறகு தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கக் கோரிய போராட்டம் காரணமாக 1969 ஆம் ஆண்டு யெச்சூரி டெல்லிக்கு சென்றார். அங்கு பிரெசிடன்ட் எஸ்டேட் பள்ளியில் உயர்நிலைக் கல்வி பயின்ற சீதாராம் யெச்சூரி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தேசிய அளவில் முதல் மதிப்பெண் பெற்று அசத்தினார்.
அதன்பிறகு டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதார பாடப்பிரிவில் பி.ஏ. பட்டமும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டமும் பெற்றுள்ளார். பிறகு இதே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். அதன்பிறகு எமர்ஜன்சி காலக்கட்டத்தில் கைதாகி சிறை சென்றார்.
1974 ஆம் ஆண்டு எஸ்.எஃப்.ஐ. மாணவர் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட யெச்சூரி, அதன்பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். எமர்ஜன்சியை தொடர்ந்து ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பு தலைவராக யெச்சூரி மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து எஸ்.எஃப்.ஐ. அமைப்பில் ஈடுபட்டு வந்த யெச்சூரி, 1984 ஆம் ஆண்டு சி.பி.ஐ. எம் மத்திய குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டார்.
1986 ஆம் ஆண்டு எஸ்.எஃப்.ஐ. அமைப்பில் இருந்து விலகிய சீதாராம் யெச்சூரி 14 ஆவது காங்கிரஸ் தலைமை குழுவில் தேர்வு செய்யப்பட்டார். பிறகு 1992 ஆம் ஆண்டு சி.பி.ஐ.எம். கட்சியின் 5-ஆவது பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீதாராம் யெச்சூரி மீண்டும் சி.பி.ஐ.எம். கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் யெச்சூரி மேற்கு வங்கத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பாராளுமன்றத்தில் பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசுவதில் பெயர்பெற்றவராக யெச்சூரி திகழந்தார். மேலும், ஆளும் கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி பேசுவதில் யெச்சூரி கைத்தேர்ந்தவர் ஆவார்.
இந்திய அரசியலில் தனது கொள்கை, மக்கள் பிரச்சினை குறித்து பேச தயங்காதவராக சீதாராம் யெச்சூரி அறியப்படுகிறார். மக்கள் பிரச்சினைகள் மற்றும் ஆளும் கட்சி ஆட்சியில் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவதோடு அவற்றை சரிசெய்ய தொடர்ந்து குரல் கொடுப்பவர்களில் யெச்சூரி முதன்மையானவர்.