ராகுல், பிரியங்காவுக்கு ஸ்மிருதி இரானி சவால்: பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தயாரா?
- பா.ஜ.க, உடன் எந்த பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாரா?
- எங்கள் கட்சியில் சுதான்சு திரிவேதி போதும். அவர்களுக்கான பதிலை கொடுப்பார்.
அமேதி:
பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் முக்கிய பிரச்சினைகளை பற்றி பேசுவதில்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் எந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தயாரா? என்று ராகுல்காந்தி, பிரியங்காவுக்கு மத்திய மந்திரியும், அமேதி தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான ஸ்மிருதி இரானி சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நான் அவர்களுக்கு (ராகுல்காந்தி, பிரியங்கா) சவால் விடுகிறேன். பா.ஜனதாவுடன் எந்த பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாரா?
இதற்கான டி.வி. சேனல், தொகுப்பாளர், இடம், நேரம் ஆகியவற்றை அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
ஒரு பக்கம் அண்ணன்-தங்கை ஜோடியும், இன்னொரு பக்கம் பா.ஜனதாவின் செய்தி தொடர்பாளர்களும் இருப்பார்கள். எல்லாம் தெளிவாகிவிடும். எங்கள் கட்சியில் இருந்து சுதான்சு திரிவேதி போதும். அவர்களுக்கான பதிலை கொடுப்பார்.
இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறி உள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல்காந்தியை தோற்கடித்தார். அதே நேரத்தில் வயநாட்டில் ராகல்காந்தி வெற்றி பெற்றார். ராகுல்காந்தி இந்த முறை வயநாடு, ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார்.