வாஷிங் மெஷினுக்குள் இருந்த பாம்பால் பரபரப்பு
- கடந்த 2 வாரமாக சலவை எந்திரம் பழுதடைந்து இருந்ததால், பயன்படுத்தாமல் மூடி வைக்கப்பட்டு இருந்தது.
- பாம்பு வடிகால் குழாய் வழியாக சலவை எந்திரத்துக்குள் புகுந்து இருக்கலாம்.
கண்ணூர்:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளிபரம்பு பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 28). டெக்னீஷியனான இவர் கடம்பேரி பகுதியில் உள்ள பாபு என்பவரது வீட்டில் சலவை எந்திரத்தை பழுதுபார்க்க சென்றார். அங்கு எந்திரத்தை இயக்க முயன்றபோது, உள்ளே ஏதோ ஒன்று சுழல்வதை கண்டார். அது துணி என நினைத்து எந்திரத்திற்குள் கையை நீட்டி எடுக்க முயன்றார். அப்போது அது பாம்பு என்பது தெரியவந்தது. உடனே ஜனார்த்தனன் கையை மேலே தூக்கினார். இதை பார்த்த அவர், பாபு ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த 2 வாரமாக சலவை எந்திரம் பழுதடைந்து இருந்ததால், பயன்படுத்தாமல் மூடி வைக்கப்பட்டு இருந்தது. அதற்குள் பாம்பு எப்படி புகுந்தது என்பது தெரியவில்லை என்று பாபு கூறினார்.
தகவல் அறிந்த வனத்துறையினர் பாம்பை லாவகமாக பிடித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது பிடிபட்டது நாகப்பாம்பு ஆகும். வடிகால் குழாய் வழியாக சலவை எந்திரத்துக்குள் புகுந்து இருக்கலாம் என்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.