மக்களவை தாக்குதல் - அனைத்து கட்சி எம்.பி.க்களின் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு
- சில எம்.பி.க்கள் அந்த இருவரையும் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர்
- நால்வரும் காவலில் எடுக்கப்பட்டு முழு விசாரணை நடந்து வருகிறது என்றார் ஓம் பிர்லா
மக்களவையில் இன்று அலுவலகள் நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து அவைக்குள் இருவர் குதித்தனர். கோஷமிட்டு கொண்டே சபாநாயகரின் இருக்கைக்கு அருகே செல்ல முயன்ற அவர்கள் புகை குண்டுகளை போன்று எதையோ வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளிக்கிளம்பியது.
இச்சம்பவத்தில் ஒரு சில எம்.பி.க்கள் அச்சத்துடன் ஓட முயன்றனர்.
ஆனால், ஒரு சில எம்.பிக்கள் அஞ்சாமல் அவர்களை பிடித்து சபை பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்.
அதே நேரம், பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியேயும் இருவர் கோஷங்களை எழுப்பி கொண்டே "கலர்" புகை குண்டுகளை வீசினர்.
நால்வரும் காவல்துறையால் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
பெரும் பாதுகாப்பு குளறுபடியாக பார்க்கப்படும் இச்சம்பவம் குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கருத்து தெரிவித்தார்.
"பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியேயும் உள்ளேயும் வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பில் நடந்திருக்கும் குளறுபடிகள் மற்றும் குறைபாடுகள் குறித்து முழு விசாரணை நடக்கிறது. இன்று அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. அனைவரிடமும் இது குறித்து கருத்து கேட்கப்படும். டெல்லி காவல்துறையும் மக்களவையும் தனித்தனியே விசாரணை மேற்கொண்டு வருகிறது. மர்ம நபர்கள் குண்டுகளை வீசி அதிலிருந்து வெளியே வந்த வர்ண புகை ஆபத்தில்லாதது என தெரிய வந்துள்ளது. பரபரப்புக்காக அவர்கள் இதை வீசியுள்ளதாக தெரிகிறது" என ஓம் பிர்லா கூறினார்.