இந்தியா

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: நீண்ட பட்டியலுடன் சந்திரபாபு நாயுடு டெல்லியில் முகாம்

Published On 2024-07-04 04:43 GMT   |   Update On 2024-07-04 04:43 GMT
  • இன்று முதல் 2 நாட்கள் டெல்லியிலேயே முகாமிட்டு சந்திப்புகளை நடத்த முடிவு.
  • மாநிலத்திற்கு தேவையான நிதி குறித்தும் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளன.

திருப்பதி:

பாராளுமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மை பெறாத நிலையில் பா.ஜ.க. சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் கட்சி எம்.பி.க்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

இதனால் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் இருவரும் எதையும் பெற்றுக் கொள்ளும் சக்தி வாய்ந்த தலைவர்களாக மாறி உள்ளனர்.

சந்திரபாபு நாயுடு கட்சி எம்பிக்கள் 3 பேருக்கு மத்திய மந்திரி பதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லி சென்றார். அவர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.

இதனை தொடர்ந்து உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டா விவசாய மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மந்திரி சிவராஜ் சவுகான், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி மனோகர் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.

இதற்காக அவர் இன்று முதல் 2 நாட்கள் டெல்லியிலேயே முகாமிட்டு சந்திப்புகளை நடத்த முடிவு செய்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் நிலுவையில் உள்ள போலவரம் உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டங்கள், அமராவதி தலைநகர் திட்டம், மாநில நெடுஞ்சாலைகள், சாலைகள் உள்ளிட்ட உள் கட்டமைப்புகளின் நிலை குறித்து டெல்லி செல்வதற்கு முன்பாக அதிகாரியுடன் கலந்து ஆலோசித்து அறிக்கை ஒன்றை சந்திரபாபு நாயுடு தயார் செய்தார்.

மேலும் ஆந்திர மாநிலத்திற்கு தேவையான நிதி குறித்தும் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த நீண்ட பட்டியலுடன் டெல்லியில் சந்திரபாபு நாயுடு முகாமிட்டுள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் மத்திய மத்திரிகளுடன் சந்திப்பின்போது ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து, ஆந்திர மாநிலத்திற்கு கூடுதல் நிதி சலுகைகள் மற்றும் வரி சலுகைகளை சந்திரபாபு நாயுடு கேட்க முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசியல் அனுபவம் வாய்ந்த சந்திரபாபு நாயுடு தற்போது பா.ஜ.க கூட்டணியில் சக்தி வாய்ந்த தலைவராக உள்ளார். இந்த சந்தர்ப்பத்தை அவர் ஒருபோதும் நழுவ விட மாட்டார். ஆந்திராவிற்கான அனைத்து திட்டங்களையும் கேட்டு பெறுவதில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் பல தொழில் நிறுவனங்களையும் ஆந்திராவுக்கு கொண்டு செல்வதில் கில்லாடியாக செயல்படுவார். அவருடைய கோரிக்கைகளை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். சந்திரபாபு நாயுடு முகாமிட்டிருப்பது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News