ட்ராவல் ஏஜென்சி மூலம் இலங்கை சுற்றுலா: விபத்தில் குடும்பத்தை இழந்தவருக்கு ரூ.1 கோடி இழப்பீடு
- டிராவல் கம்பெனி மூலம் 3.56 லட்ச ரூபாய் கொடுத்து இந்த சுற்றுலாவை அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
- இதில், தங்குமிடம், போக்குவரத்து, ஊர் சுற்றி பார்த்தல், பயண காப்பீடு அனைத்தும் அடங்கும்.
யோகேஷ் சைகல் என்பவர் தனது மனைவி, மகன், மகள் மற்றும் மாமனாருடன் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
தாமஸ் குக் என்ற டிராவல் கம்பெனி மூலம் 3.56 லட்ச ரூபாய் கொடுத்து இந்த சுற்றுலாவை அவர் ஏற்பாடு செய்துள்ளார். இதில், தங்குமிடம், போக்குவரத்து, ஊர் சுற்றி பார்த்தல், பயண காப்பீடு அனைத்தும் அடங்கும்.
இலங்கைக்கு சுற்றுலா சென்ற அவரின் குடும்பம் கொழும்புவில் காரில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரியில் மோதியுள்ளது. அந்த விபத்தில் சைகலின் மனைவி, மகன், மாமனார் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த சைகல் மற்றும் அவரது மகள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தனர்.
சைகலின் சுற்றுலா பயணம் தாமஸ் குக் என்ற டிராவல் கம்பெனி புக் செய்யப்பட்டிருந்தாலும், அவரின் இலங்கை சுற்றுலாவை ரெட் ஆப்பிள் டிராவல் கம்பெனி தான் கவனித்து கொண்டது.
இந்த விபத்திற்கு பிறகு டிராவல் கம்பெனிகளின் அலட்சியத்தால் எனது குடும்பத்தை இழந்து விட்டேன் என்று டெல்லி நுகர்வோர் ஆணையத்திடம் யோகேஷ் சைகல் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் முடிவில் தாமஸ் குக் மற்றும் ரெட் ஆப்பிள் டிராவல் கம்பெனிகள் சேர்ந்து 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.