இந்தியா

மாட்டு கொட்டகையில் படுத்தால் புற்றுநோய் குணமாகும்: உ.பி. பா.ஜ.க. அமைச்சரின் அபூர்வ கண்டுபிடிப்பு

Published On 2024-10-14 06:11 GMT   |   Update On 2024-10-14 07:28 GMT
  • பசுவின் முதுகில் தடவினால் ரத்த அழுத்தம் குறையும்
  • மாடுகளுக்கு உரிய மரியாதை இல்லை.

உத்தரபிரதேச அமைச்சர் ஒருவர் மாட்டு தொழுவத்தில் படுத்திருப்பது புற்றுநோயை குணப்படுத்தும் என்றும் பசுவின் முதுகில் தடவினால் ரத்த அழுத்தம் குறையும் என்றும் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. அமைச்சர் சஞ்சய் கங்வார் நவ்காவா பகடியாவில் கோசலா ஒன்றை திறந்து வைத்தார். அதன்பிறகு பேசிய அவர், "மாட்டு தொழுவத்தில் படுத்து அதை சுத்தம் செய்வதன் மூலம் புற்றுநோயை குணப்படுத்த முடியும். பசுவின் முதுகில் தடவினால் ரத்த அழுத்தம் குறையும்." 

"ரத்த அழுத்த நோயாளி ஒருவர் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பசுவின் முதுகில் தடவினால் அவர்களின் மருந்து அளவை 10 நாட்களில் 20 மில்லி கிராமில் இருந்து 10 மில்லி கிராமாக குறைக்கலாம்."


 

"இங்கே ரத்த அழுத்த நோயாளி இருந்தால் பசுக்கள் உள்ளன. அந்த நபர் தினமும் காலை, மாலை நேரங்களில் மாட்டின் முதுகில் தடவிக் கொடுக்க வேண்டும். மாடுகள் மூலம் உருவாகும் பொருட்கள் ஏதோ ஒருவகையில் நமக்கு பயனுள்ளதாகவே இருக்கும். மாட்டு சாணம், புண்ணாக்குகளை எரிப்பதன் மூலம் கொசுக்களை ஒழிக்க முடியும்."

"தாய்க்கு சேவை செய்யவில்லை என்றால் அம்மா யாருக்காவது தீங்கு செய்வாரா? மாடுகள் விளை நிலங்களில் மேய்வதாக கூறுகின்றனர். மாடுகளுக்கு உரிய மரியாதை இல்லை. மாடுகளுக்கு உரிய மரியாதை இல்லாததால் இந்த பிரச்சினை உருவாகிறது. ஈத் பண்டிகை அன்று முஸ்லிம்கள் மாட்டு தொழுவத்திற்கு வரவேண்டும். ஈத் அன்று செய்யப்படும் வரமிளகாய் பசும் பாலில் செய்யப்பட வேண்டும்," என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News