இந்தியா

வங்காளதேச அதிபர் பதவி விலகக் கோரி மாணவர்கள் போராட்டம்

Published On 2024-10-23 05:38 GMT   |   Update On 2024-10-23 05:38 GMT
  • தலைநகர் டாக்காவில் பேரணியாக சென்றனர்.
  • அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

டாக்கா:

வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்ததால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

இதையடுத்து வங்காள தேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. இதற்கிடையே வங்காளதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் அளித்த பேட்டியில், ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறும் முன் அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததற்கான ஆவண ஆதாரங்கள் எதுவும் தன்னிடம் இல்லை என்று கூறினார்.

இதனால் அதிபருக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அதிபர் பதவி விலக வேண்டும் உள்பட 5 கோரிக்கைகளை ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவுக்காக போராடிய மாணவர் இயக்கத்தினர் வலியுறுத்தி தலைநகர் டாக்காவில் பேரணியாக சென்றனர். அதிபர் மாளிகையை நோக்கி அவர்கள் கோஷமிட்டபடி சென்றனர்.

பின்னர் இரவு அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது தடுப்புகளை உடைத்து அதிபர் மாளிகைக்குக்குள் நுழைய முயன்றனர். அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.

இதனால் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்களை தடுத்து அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இதற்கிடையே போராட்டக்காரர்களை தடுக்க பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

போராட்டக்காரர்கள் கூறும் போது, `ஹசீனா அரசின் கூட்டாளியான தற்போதைய அதிபர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.

அவர் தனது கருத்துக்களில் உறுதியாக இருந்தால், அதிபர் பதவியை வகிக்க அவர் தகுதியுள்ளவரா என்பதை இடைக்கால அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என்றனர். 

Tags:    

Similar News