இந்தியா

இப்படியும் ஒரு வினோதம்: பிச்சைக்காரரிடம் கடன் வாங்கிய தொழிலதிபர்

Published On 2024-11-04 04:53 GMT   |   Update On 2024-11-04 04:53 GMT
  • கடன் வாங்கிய அனைவருக்கும் திவால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
  • கடனாக வழங்கிய பணம் இனி திரும்ப கிடைக்காது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் கம்பம் மாவட்டம் போனக்கல்லை சேர்ந்தவர் அசோக். இவர் தனது மனைவியுடன் போனக்கல்லில் உள்ள சாய்பாபா கோவில் முன்பு பிச்சை எடுத்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் படிக்கும் ஒரு மகள், மகன் உள்ளனர்.

அசோக் பிச்சை எடுத்து சம்பாதிக்கும் பணத்தை தனது மகளின் எதிர்காலத்திற்காக கொஞ்சம், கொஞ்சமாக ரூ.50 ஆயிரம் வரை சேமித்து வைத்து இருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு போனக்கல்லில் நரசிம்ம ராவ் என்பவர் நடத்தி வரும் ஓட்டலில் உணவு சாப்பிட சென்றார். அப்போது நரசிம்ம ராவ் அசோக்கிடம் தனக்கு அவசரமாக ரூ.50 ஆயிரம் தேவைப்படுகிறது. கடனாக கொடுத்தால் வட்டியுடன் திருப்பித் தருவதாக கூறினார்.

இதனை நம்பிய அசோக் பிச்சை எடுத்து சேமித்து வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை நரசிம்மராவிடம் கொடுத்தார். பணம் கொடுத்ததற்கான ஆதாரமாக பாண்டு பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்.

இந்த நிலையில் தொழிலதிபர் நரசிம்ம ராவிற்கு ரூ.2.75 கோடிக்கு கடன் இருப்பதாகவும், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அதனை திருப்பி தர முடியாது என தனது வக்கீல் மூலம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

பின்னர் கடன் வாங்கிய அனைவருக்கும் திவால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதேபோல் பிச்சைக்காரர் அசோக்கிற்கும், நரசிம்ம ராவ் திவால் நோட்டீஸ் அனுப்பினார்.

நோட்டீசை கண்ட அசோக் கடனாக வழங்கிய பணம் இனி திரும்ப கிடைக்காது. தொழிலதிபரை நம்பி பணம் கொடுத்ததால் தனது மகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டதாக கவலை தெரிவித்தார்.

Tags:    

Similar News