வயிற்றுவலி என வந்தவருக்கு திடீர் பிரசவம்: சிகிச்சைக்கு அழைத்து வந்த கணவர் அதிர்ச்சி
- டாக்டர் நோயின் தன்மையை அறிய சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
- கழிவறையில் வைத்தே அவருக்கு குழந்தை பிறந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாவக்காடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் அவர் சாவக்காட்டில் உள்ள தாலுகா மருத்துவமனைக்கு தனது கணவரை அழைத்து கொண்டு சிகிச்சை பெற சென்றார்.
அந்த பெண்ணை பரிசோதித்த டாக்டர், நோயின் தன்மையை அறிய சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து அந்த பெண் சிறுநீர் சேகரிப்பதற்காக ஆஸ்பத்திரியில் இருந்த கழிவறைக்கு சென்றார்.
அப்போது கழிவறையில் வைத்து அந்த பெண்ணுக்கு பிரசவமாகி உள்ளது. கழிவறையில் வைத்தே அவருக்கு குழந்தை பிறந்தது. வயிற்று வலிக்காக சிகிச்சை பெற அழைத்து வந்த தனது மனைவி, குழந்தை பெற்ற சம்பவம் அவரை சிகிச்சைக்காக அழைத்து வந்த கணவரை அதிர்ச்சியடைய செய்தது.
கழிவறையில் பிரசவித்தது குறித்து அந்த பெண்ணிடம் டாக்டர்கள் கேட்டனர். அப்போது, தான் கர்ப்பமாக இருந்தது தனக்கே தெரியாது என்று அந்த பெண் தெரிவித்தார். அவர் கூறியதை கேட்ட டாக்டர்கள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்களும் ஆச்சரியமடைந்தனர்.
இதையடுத்து அந்த பெண் மற்றும் அவருக்கு பிறந்த குழந்தை ஆகிய இருவரும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பிறந்த குழந்தைக்கு தொற்று ஏதும் உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டி இருப்பதால் கூடுதல் பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
ஆனால் அந்த பெண்ணின் கணவர், தனது மனைவி மற்றும் அவருக்கு பிறந்த குழந்தையை சாவக் காட்டில் உள்ள வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.