மதுபான கொள்கை ஊழல் வழக்கு: கவிதாவிற்கு ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம்
- கடந்த மார்ச் 15-ம் தேதி கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது.
- கடந்த ஏப்ரல் 11-ம் தேதி சி.பி.ஐ.யும் திகார் சிறையில் வைத்து கவிதாவை கைது செய்தது.
டெல்லி அரசின் மதுபான கொள்கையில் நடந்த முறைகேட்டை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக தெலுங்கானா மாநிலத்தின் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் கவிதா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு தொடர்ந்துள்ளது. சி.பி.ஐ.யும் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த இரண்டு வழக்குகளில் கடந்த மார்ச் 15-ம் தேதி கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது. அவர் திகார் சிறையில் இருந்தார். கடந்த ஏப்ரல் 11-ம் தேதி சி.பி.ஐ.யும் திகார் சிறையில் வைத்து கைது செய்தது.
இதனையடுத்து ஜாமின் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கவிதா மனுத்தாக்கல் செய்திருந்தார். அப்போது அவரது ஜாமின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் அமலாக்கத்துறை, சிபிஐ தொடர்ந்த 2 வழக்குகளில் இருந்தும் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் கவிதா மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கவிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி ஆஜரானார்.
இதே வழக்கில் கைதான ஆம் ஆத்மி தலைவர் மணீஷ் சிசோடியாவிற்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது, அதே போல் கவிதாவிற்கும் ஜாமின் வழங்கவேண்டும் என்று அவர் வாதிட்டார்.
கவிதா ஏற்கனவே 5 மாதங்கள் சிறையில் உள்ளார். விசாரணை காவல் அவருக்கு தண்டனையாக மாறக்கூடாது என்று கூறி கவிதாவிற்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.