அவையில் இல்லாத தி.மு.க. எம்.பி. மீது பாய்ந்த சஸ்பெண்ட் நடவடிக்கை...!
- வண்ண புகை குண்டு வீச்சு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
- உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
பாராளுமன்ற மக்களவையில் இருவர் வண்ண புகை குண்டுகளை வீசிய சம்பவம், பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு வெளிச்சம் போட்டு காட்டியது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மத்திய உள்துறை அமைச்சர் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும். அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என கூச்சலிட்டனர்.
இதன்காரணமாக சபாநாயகர் மக்களவையில் அமளியில் ஈடுபட்ட 13 எம்.பி.க்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்ந்தது. இவர்கள் அனைவரும் இந்த குளிர்கால தொடரில் மீதமுள்ள நாட்களில் கலந்து கொள்ள முடியாது.
சபாநாயகர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் பட்டியலில் திமுக எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன் பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆனால் நேற்று மக்களவை நடைபெற்றபோது பார்த்திபன் கலந்து கொள்ளவில்லை. அவர் டெல்லியிலே இல்லை எனக் கூறப்பட்டது.
மக்களவையில் கலந்து கொள்ளாத எம்.பி. மீது சஸ்பெண்ட் நடவடிக்கையா? என குழப்பம் நிலவியது. பின்னர், தவறாக அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, அவர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை சபாநாயகர் திரும்பப்பெற்றார்.
இதனால் சிறிது நேரம் நிலவிய குழப்பம் முடிவுக்கு வந்தது. இதுகுறித்து ஜோஷி கூறுகைளில் "நான் தவறுதலாக அடையாளம் கண்டும் சபாநாயகருக்கு எம்.பி.யின் பெயரை தெரிவித்து வேண்டுகோள் விடுத்துவிட்டேன்" எனத் தெரிவித்தார்.
மக்களவையில் 13 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தெரிக் ஓ-பிரைன் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.